அரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் மேனா.உலகநாதன்.
அரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் அதிகரித்து விட்ட காலம் இது… கடந்த 2010 ஆம் ஆண்டு நெல்லை தினமலரின் வார இணைப்பான செய்திமலரில் பிரசுரமானது எனது இந்தக் கட்டுரை… இப்போது படித்துப் பார்த்தால் பொருத்தமாக இருக்கிறது…. உங்கள் மறுவாசிப்பிற்காக 7 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட அந்தக் கட்டுரை இங்கே மீள் பதிவாக…. (இதுபோன்ற கட்டுரைகளை பிரசுரித்து அந்தக் காலக்கட்டங்களில் தயக்கமின்றி எழுதுவதற்கு ஊக்கமளித்த எனது முன்னோடிகளில் ஒருவரான (உண்மையான) மூத்த பத்திரிகையாளர் திரு. தி.சிகாமணி அவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்…)
——————————————————————
நல்லவேளையாக ராகுல்காந்தி அப்படி ஒரு பதிலைச் சொன்னார். இல்லாவிட்டால், அரசியல் ஆர்வம் உள்ள பல இளைஞர்கள், தலைமைப் பதவிகளைப் பிடிக்க ஓமகுண்டங்கள் வளர்ப்பது, பாதயாத்திரை செல்வது, கோவிலுக்கு யானை வாங்கிக் கொடுப்பது போன்ற வழிகளை மட்டுமே கையாளத் தொடங்கி விடுவார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி, போபாலில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
நமது செய்தியாளர்களுக்கு, எப்போதுமே வசீகரமான அரசியல் கதாநாயகர்களைக் கட்டி எழுப்புவதில் அலாதி ஆர்வம் உண்டு.
அதன் அடிப்படையில் வருங்காலத்தில் நீங்கள் பிரதமராவதற்கு வாய்ப்பு உண்டா? என்று கேட்டுள்ளனர்.
வருங்காலத்தைப் பற்றி எப்படி இப்போது சொல்லமுடியும் என்று நழுவலாக அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.
நமது செய்தியாளர்கள் மனம் தளராத விக்கிரமாதித்தர்களாயிற்றே! விடுவார்களா பின்னே?
‘பிரதமராகவேண்டும் என்று உங்களுக்கு தலையெழுத்து இருந்தால்….?’ என்று தலையெழுத்தைத் துணைக்கழைத்திருக்கிறார்கள்.
‘அதற்கு அவர், தலைஎழுத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. கடின உழைப்பை மட்டுமே நம்புகிறேன்’ என்று பதில் சொல்லி உள்ளார்.
இதைத்தான், ‘நல்லவேளையாக’ என்று கருதவேண்டி இருக்கிறது.
ஏனென்றால், இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா என்று நாம் பெருமைப் பட்டுக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், அவர்களில் பெரும்பாலோர் உழைப்பின் மீது நம்பிக்கை உள்ளவர்களா என்பதுதான் முக்கியமான கேள்வி.
உதாரணமாக ஓர் இளைஞரின் கதையை எடுத்துக் கொள்ளலாம்.
யாரோ சொன்னார் என்று, அண்மையில் பாலியல் புகாரில் சிக்கிய சாமியாரின் படத்தை வீட்டில் மாட்டினார் அந்த இளைஞர்.
அவரது ஆசிரமத்தில் நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனைகளுக்கும் அவர் செல்லத் தொடங்கி உள்ளார்.
அங்கு சில பயிற்சிகளும் கூட அளித்துள்ளனர். இந்த நேரத்தில் அவர் புதிதாகத் தொடங்கிய கடையில் வியாபாரம் அமோகமாக நடந்துள்ளது.
மிகக் குறுகிய காலத்தில், சொந்த வீடு, கார் என பெருமளவில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.
இந்த வளர்ச்சிக்கு, அந்த சாமியாரின் அருளாசியே காரணம் என்று அழுத்தமாக நம்பத் தொடங்கி விட்டார்.
திடீரென அந்தச் சாமியார் குறித்து வெளிவந்த புகார்கள், அவரை அதிர்ச்சி கொள்ளச் செய்தன.
அழுத்தமான தனது நம்பிக்கை பொய்த்துப் போனது கண்டு அந்த இளைஞர் நிலைகுலைந்தார். பின்னர் ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டு தற்போது சகஜநிலைக்கு திரும்பி வருகிறார்.
ஆனாலும் அவரது வியாபாரம் என்னவோ நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.
கடை இருக்கும் இடம், அதற்கு அவர் செய்த முதலீடு, கொடுத்த உழைப்பு, தொழில்ரீதியான லாவகம் இவைதான் தனது வெற்றிக்குக் காரணமே தவிர, யாரோ ஒரு சாமியார் அல்ல என்பதை இப்போது அந்த இளைஞர் உணரத் தொடங்கி உள்ளார்.
அந்த வகையில் அவர் நம்பிய சாமியார் பாலியல் புகாரில் சிக்கியதும் கூட நல்லவேளையாக என்றுதான் சொல்ல வேண்டும்.
நமது சமூகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் இப்படித்தான் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
வாழ்வில் வெற்றிபெற நேர்வழியை விட, குறுக்கு வழியையே அதிகம் நம்புகிறார்கள்.
வங்கிகளின் இருப்பைக்காட்டிலும் கோயில் உண்டியல்களின் வரவு அதிகரிக்கத் தொடங்கி இருப்பதன் காரணமும் கூட இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட மனநிலையில் உள்ள இளைஞர்கள், நாட்டில் எழுச்சி நாயகர்களாக சித்தரிக்கப்படும் பலர் சொல்வதை அப்படியே நம்புகிறார்கள்.
‘ஆண்டவன் சொல்றான், அருணாசலம் செய்யிறான்’ என்று திரைப்படத்தில் கித்தாப்புக்காக வரும் மத்தாப்பு வசனங்களை, நமது இளைஞர்கள் வேத வாக்காகவே கருதுகிறார்கள்.
தங்களிடம் இருந்தே பல கோடி டாலரை (ரூபாய் அல்ல) வசூலிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள எந்திரன் பட கட் – அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள்.
சொந்த நாட்டை இழந்து தவிக்கும் மக்களுக்கு நாடு வேண்டும் என்று கேட்டுப் போராடி மடிந்தவர்களை விட, அதனைத் திரைப்படத்தில் எழுச்சிப்பாடலாக பாடியாடும் கதாநாயகனைத்தான் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
இப்படியாக, அரசியலில், ஆன்மீகத்தில், திரைப்படத்தில் என்று அனைத்துத் தளங்களிலும் கட்டமைக்கப்படும் எழுச்சி நாயகர்களின் வாயில் இருந்து வருவதை எல்லாம், வாழ்க்கைத் தத்துவமாக எடுத்துக் கொள்ளும், மனோபாவம், இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்த பாடில்லை.
இதில், ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. கருத்துக்களை உருவாக்குவதை விட, கதாநாயகர்களை உருவாக்குவதிலேயே அவற்றின் கவனம் இருக்கிறது.
கல்வித்துறையில் அது சாத்தியமில்லாமல் இருந்தது. அந்தக் குறையையும் அப்துல்கலாம் மூலம் போக்கிக் கொண்டன நமது ஊடகங்கள்.
அவர் ஒரு திறமையான அணுவிஞ்ஞானி என்பதில் யாருக்கும் மறுப்பு இருக்க முடியாது. நல்ல மனிதர் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.
இவற்றையெல்லாம் தாண்டி, வாழ்வின் சகல சந்தேகங்களுக்கும் தீர்வு சொல்லக் கூடிய ஆதர்ஷபுருஷராக மாணவர்கள் முன் அவரைச் சித்தரிப்பதுதான் பிரச்சனைக்குரியது.
அப்துல்கலாம் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இவைதான். 2020ல் இந்தியா வல்லரசாக வேண்டும். ஆகிவிடும்.
சரி.
எதற்கு?
ஏழ்மையை ஒழித்து, உற்பத்தியில் தற்சார்பை நிலைநிறுத்திய நல்லரசாக ஒரு நாடு உயர வேண்டும் என்ற கனவில் பொருள் இருக்கிறது. அணு ஆயுதங்களை அதிகமாகக் கொண்ட வல்லரசாக வேண்டும் என்று ஆசைப்படுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்?
அண்டை நாடுகளோடு நாமும் சேர்ந்து அமைதி இழப்பதைத் தவிர, அதனால் நமக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?
ஆனால், இதைப்பற்றி எல்லாம் கவலைப்படும் அளவுக்கு நம் இளைஞர்களை நாம் சிந்திக்க அனுமதிப்பது இல்லை. வல்லரசு என்ற சொல், ஒரு போதைப் பொருளைப் போல, அவர்களின் நாடி, நரம்புகளில் ஊடுருவி நிலை கொள்கிறது.
அந்தச் சொல்தரும் உன்மத்தம், அனைத்து இளைஞர்களையும் அணுவிஞ்ஞானிகள் ஆக வேண்டும் எனத் துடிக்க வைக்கிறது.
இந்த நாட்டுக்கு எத்தனை அணுவிஞ்ஞானிகள் தேவை?
இந்தியா ஒரு விவசாய நாடு என்று சொல்கிறோம். இங்கே அணுவிஞ்ஞானிகளை விட, விவசாய வல்லுநர்கள்தான் அதிகம் தேவைப்படுகிறார்கள்.
அது குறித்து யாரும் பேசுவதே இல்லை. விவசாயம் என்பது வசீகரம் இல்லாத தொழிலாகத் தெரிகிறது.
அப்துல்கலாம் ஆவேன் என்று சொல்ல லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள்.
விவசாயி ஆவேன் என்று இதுவரை இந்தியாவில் ஒரு இளைஞர்கூடச் சொன்னதில்லை.
நம் சமூகத்தில் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு உலவ விடப்பட்டிருக்கும் எழுச்சி நாயக பிம்பங்களுக்கு, இவை சில உதாரணங்கள் மட்டுமே.
இன்னும் நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இத்தகைய எழுச்சி நாயகர்கள் சொல்லும், பொய்யான, அடிப்படையற்ற சில கருத்துகள் மீது இளைஞர்கள் எந்த விமர்சனமும் இன்றி நம்பிக்கை கொள்ளும் நிலை ஆபத்தானது.
சமூகத்தின் இருண்ட பக்கங்களையும், யதார்த்தங்களையும் எடுத்துச் சொல்லும் அல்லது சொன்ன யாரையேனும், இளைஞர்களுக்கு நாம் முன்மாதிரிகளாகக் காட்டியது உண்டா?
முன்மாதிரிகள் தேவைதான் ஆனால், அவை அர்த்தமுள்ளவையாக இருக்க வேண்டுமே தவிர, அனர்த்தமானவையாக இருக்கக் கூடாது.
அப்படி இல்லாத பட்சத்தில், இந்தியா இளைஞர்கள் மிகுந்த நாடு என்று பெருமை கொள்வதில் எந்த பொருளும் இருக்க முடியாது.
சிந்தனைவளம் அற்ற மனிதவளத்தால் எந்தப் பயனும் இல்லை.
மேனா.உலகநாதன்.
(7.10.2010)