ஆதார் கட்டாயம், 17 வயது நிறைவடைய வேண்டும்… : மாணவர்களை திணற வைக்கும் நீட் தேர்வு விதிமுறைகள்..

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் விண்ணப்பத்தில் ஆதார் எண் பதிவிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, அதேபோல, 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

12-ம் வகுப்பு தேறிய மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப்படிப்பு பயில நீட் எனும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ நேற்றுமுன்தினம் வெளியிட்டது. இதில் நாடு முழுவதும் நீட் தேர்வு வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு நேற்று முதல் விண்ணப்பிக்க மாணவர்கள் தொடங்கிவிட்டனர், இவர்கள் மார்ச் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணத்தை மாரச் 10-ம் தேதி நள்ளிவரவு 11.50 வரை கட்டணம் செலுத்தலாம்.

கட்டணம் எவ்வளவு?

பொதுப்பிரிவினருக்கு ரூ.1400 கட்டணமும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.750 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை எந்த வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம்.

அல்லது இ-பேங்கிங், யுபிஐ ஆப்ஸ், பல்வேறு நிறுவனங்களின் இ வாலட்கள் மூலமும் கட்டணத்தை செலுத்தலாம்.

ஆதார் கட்டாயம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது ஆதார் கார்டு இல்லாத மாணவர்கள் ஆதார் பதிவு எண்ணை குறிப்பிட வேண்டும்.

ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், பிறந்த தேதி, பாலினம் ஆகியவை பள்ளியில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களோடு சரியாக இருந்தால் மட்டுமே நீட் விண்ணப்பத்தை மாணவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பள்ளிச்சான்றிதழில் உள்ளதுபோன்று ஆதார் அட்டையில் விவரங்களை திருத்திய பின் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், வெளிநாட்டு மக்கள் தங்களின் பாஸ்போர்ட் எண்ணை குறிப்பிட வேண்டும்.

17 முதல் 25 வரை

நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும் மாணவ, மாணவிகளுக்கு 17வயது நிறைவடைந்து இருக்க வேண்டும், 25வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க கூடாது.

இயற்பியல், வேதியியல், உயிரியியல், பயோ-டெக்னாலஜி படித்தவர்கள் அந்த பாடங்களில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று இருத்தல் வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 சதவீதம் மதிப்பெண்களும், மாற்றுத்திறனாளிகள் 45 சதவீதம் மதிப்பெண்களும் பெற்று இருத்தல் வேண்டும்.

தகுதியற்றவர்கள்

திறந்தநிலை பிரிவிலும், தனியாக 12ம் வகுப்பு தேறியவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். மேலும், கூடுதலாக பயோடெக்னாலஜி பாடத்தை படித்து இருந்தாலும் அந்த மாணவர்களும் தகுதியற்றவர்கள்.

நீட் தேர்வில் கேள்விகள் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, உருது, குஜராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் கேட்கப்படும். இதில் மாணவர்கள் தாங்கள் எந்தப் பிரிவில் தேர்வு எழுத விரும்புகிறார்கள் என்பதை விண்ணப்பிக்கும் போது குறிப்பிட வேண்டும்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த பின், மாணவர்களுக்கு அனுமதிச் சீட்டு ஏப்ரல் 2-வது வாரத்தில் வெளியிடப்படும்.

எத்தனை மணிக்கு வர வேண்டும்?

நீட் தேர்வுக்கு வரும் மாணவர்கள் தேர்வு நாளான மே 6-ம் தேதி காலை 7.30 மணிக்கு தேர்வு நடக்கும் அறைக்கு வந்துவிட வேண்டும். அங்கு மாணவர்களுக்கு 7.30 மணி முதல் 9.35 மணி வரை தேர்வு கண்காணிப்பாளரால் அனுமதிச்சீட்டு குறித்து சோதனை நடைபெறும். 9.45 மணிக்கு கேள்வித்தாள் தரப்படும். 9.55 மணிக்கு கேள்வித்தாளை மாணவர்களை பிரித்து, 10 மணியில் இருந்து தேர்வு எழுதத் தொடங்கலாம்.

தேர்வுகள் காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறும். இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் இருந்து 180 கேள்விகள்(அப்ஜெக்டிவ் டைப்) கேட்கப்படும்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, திருச்சி, நாமக்கல், திருவள்ளூர், வேலூர் ஆகிய 10 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாடுகள்

தேர்வுக்கு வரும் மாணவர்கள் அரைக் கை சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும். தேர்வுக்கு மை பேனா, ரப்பர், பென்சில், ஸ்கேல், செல்போன், பென்டிரைவ், போன்றவை கொண்டுவர அனுமதியில்லை. கறுப்பு மற்றும் நீல நிற பால்பாயிண்ட் பேனாக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மாணவர்கள் ஷூ அணிந்துவரக்கூடாது, செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும்.

மாணவிகள் காதில் தோடு, செயின்,மூக்குத்தி, டாலர் உள்ளிட்ட உலோக பொருட்களை அணிந்து வரக்கூடாது. தண்ணீர்பாட்டில், சாப்பாடு எடுத்துச் செல்லக்கூடாது. மாணவிகள் உயரம் அதிகமான ஹீல்ஸ் செருப்புகள் அணிந்து வரக்கூடாது.

மாணவர்கள் தேர்வுக்கு வரும் போது நுழைவுச் சீட்டும், ஒரு பாஸ்போர்ட் புகைப்படமும் எடுத்து வர வேண்டும். பதில் எழுதும் தாளில் எந்தவிதமான கணக்குகளும், குறிப்புகளையும் மாணவர்கள எழுதக் கூடாது.

கடும் சிரமம்

இதில் கிராமப்புற மாணவர்கள் திணறும் வகையில் நீட் தேர்வு விண்ணப்பம் முழுவதும் ஆன்-லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் முழுவதும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே இருப்பதால், தமிழக கிராமப்புற மாணவர்கள் புரிந்து கொண்டு நிரப்புவதில் பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு பயிற்சி மையங்கள், அல்லது பொது சேவை மையங்களை அணுகிதான் மாணவர்கள் நீட் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.

கிராமப்புற மாணவர்களும், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் எளிதாக நீட் தேர்வு விண்ணப்பத்தை நிரப்பும் வகையில் தமிழக அரசு ஏதேனும் சிறப்பு மையங்கள், அல்லது உதவி மையங்கள் அமைக்குமா என்பது மாணவர்களின், பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.