ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்? : மு.க.ஸ்டாலின்

“ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு மிகமுக்கியமான “போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை” வழங்குவதில் அ.தி.மு.க அரசு காட்டும் மெத்தனமும், நடைபெற்றுள்ள இமாலய ஊழலும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்? என்ற கேள்வியை எழுப்புவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு:

பத்தாம் வகுப்பிற்கு மேல் உயர்கல்வி பெறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான மத்திய அரசின் “போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை” திட்டத்தில் 80க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் 800 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளன என்று சி.ஏ.ஜி அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உயர்கல்வி பெற தவிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் இக்கல்வி உதவித் தொகை 2012-13 முதல் 2016-17 கல்வியாண்டு வரை எவ்வாறு வழங்கப்படுகிறது என்று தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் செய்யப்பட்ட தணிக்கையின் விளைவாக இந்த மெகா ஊழல் மட்டுமல்ல – ஈவு இரக்கமற்ற, மனித நேயமற்ற இந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மிகாமல் வருட வருமானம் பெறும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கான இந்தத் திட்டம் இதைவிட கூடுதலாக அதிக வருமானம் பெறும் 1577 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது – உண்மையிலேயே மாணவர்களுக்கு சென்றதா அல்லது மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கல்வி உதவித்தொகை பெறுவோரின் விண்ணப்பங்களில் 8-ல் 2 விண்ணப்பங்கள் மட்டுமே ஆறுமாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், மீதி விண்ணப்பங்கள் எல்லாம் ஏழு மாதத்திலிருந்து 21 மாதங்களுக்குப் பிறகுதான் அனுப்பப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியிருப்பதைப் பார்த்தால் உன்னதமான கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுவதில் புரையோடிப் போயிருக்கின்ற மிக மோசமான அவல நிலைமையை விளக்கியுள்ளது இந்த தணிக்கை அறிக்கை.

2015 ஆம் ஆண்டிலிருந்து இந்தக் கல்வி உதவித்தொகை பெறத் தகுதியுள்ள 21 ஆயிரத்து 706 விண்ணப்பங்கள் இப்படி தாமதப்பட்டுள்ளது என்றும், இதனால் மத்திய அரசு அளித்த ரூ. 14.81 கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகை பயனடைய வேண்டிய மாணவர்களுக்குச் செல்லாமல் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நல இயக்குனரகத்தின் வங்கிக் கணக்கிலேயே வீணாக முடக்கி வைக்கப்பட்டிருந்தது என்ற வேதனை மிகுந்த தகவலையும் வெளியிட்டிருக்கிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு மிகமுக்கியமான இந்த “போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை” வழங்குவதில் அ.தி.மு.க அரசு காட்டும் மெத்தனமும், நடைபெற்றுள்ள இமாலய ஊழலும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்? என்ற நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளது. உயர் கல்வி பெற வேண்டிய மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையைக் கூட நிறுத்தி வைத்திருப்பது தெரியாமல் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி “கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன்” என்று ஊழலின் மொத்த உருவமாக பவனி வந்து கொண்டிருக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அநீதி இது என்பதை அ.தி.மு.க அரசு உணர வேண்டும்.

ஆகவே, ஆதிதிராவிடர் நலத்துறை வங்கிக் கணக்கில் இந்த கல்வி உதவித் தொகை நிதி முடக்கி வைக்கப்பட்டிருந்தால் அதை உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அளித்திட வேண்டும். போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை காலதாமதமின்றி குறித்த காலத்திற்குள் அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்து உடனுக்குடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 800 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகையில் நடைபெற்றுள்ள இந்த ஊழல் குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதும், முறைகேடுகளைச் செய்த கல்வி நிறுவனங்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுத்து உண்மையான பயனாளிகளுக்கு இந்த கல்வி உதவித் தொகை போய் சேருவதை உறுதி செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் அதில் தெரிவித்துள்ளார்.

நாட்டை முன்னேற்றியதுதான் நான் செய்த குற்றமா?: மக்களவையில் மோடி உரை

2019-20 தமிழக பட்ஜெட் : சிறப்பு அம்சங்கள் ..

Recent Posts