ஆந்திர அமைச்சரவையில் இருந்து பாஜக அமைச்சர்கள் விலகல்..

மத்திய பாஜக கூட்டணி அரசியல் இருந்து வெளியேற தெலுங்குதேசம் முடிவு செய்துள்ள நிலையில், ஆந்திர அமைச்சரவையில் இருந்து பாஜக அமைச்சர்கள் இருவர் ராஜினாமா செய்துள்ளனர்.

ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின், 2014-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தேர்தலைச் சந்தித்தது.

அப்போது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதி உதவியும் அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட 19 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. தேர்தல் முடிந்து இந்த கூட்டணி மத்தியிலும், மாநிலத்திலும் பொறுப்பேற்றது. மத்திய அரசில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் சார்பில் அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ்.சவுத்திரி ஆகிய இருவர் அமைச்சர்களாக உள்ளனர்.

ஆனால் ஆந்திராவுக்கு சிறப்பு நீதி கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால், பட்ஜெட் கூட்டத் தொடரில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திர மாநிலத்துக்கு அளித்துள்ள 19 வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும், இல்லாவிட்டால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறப் போவதாக தெலுங்கு தேசம் அறிவித்து இருந்தது.

ஆனால் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து மத்திய பாஜக கூட்டணி அரசில் இருந்து வெளியேறப் போவதாக தெலுங்குதேசம் நேற்று அறிவித்தது. அக்கட்சியின் சார்பில் அமைச்சர்களாக உள்ள அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ்.சவுத்ரி ஆகிய இருவரும் இன்று பதவி விலக உள்ளனர்.

இதனிடையே தெலுங்குதேசத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆந்திர கூட்டணி அரசில் அமைச்சர்களாக உள்ள பாஜகவைச் சேர்ந்த சுகாதார அமைச்சர் ஸ்ரீநிவாஸ், மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மணிகைலா ராவ் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். முதல்வர் அலுவலகத்திற்கு சென்று அவர்கள், தங்கள் ராஜினாமா கடிதங்களை ஒப்படைத்தனர்.