இந்த இடைத்தேர்தல் நேரத்தில் முக்கிய அரசியல் கட்சிகள் பலவும் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருக்கின்றன. ஆனால், 2ஜி விவகாரம் வெடித்தபோது, இவற்றில் எந்தக் கட்சியும் தி.மு.க.வுக்கு ஆதரவாக இல்லை. அவற்றின் ஆதரவைப் பெறும்வகையில் லாபி செய்யவும் தி.மு.க.வில் ஆட்கள் இல்லை. மத்திய அரசில் தொடர்ந்து அங்கம் வகித்தும் டெல்லியில் தி.மு.க.வின் செயல்பாடு சூனியமாகவே இருந்தது. கூட்டணிக்கட்சியான காங்கிரஸோ 2ஜி விவகாரத்தில் தி.மு.க.வை நன்றாக ‘வச்சி செய்தது’. குரல்வளையில் கத்தி இருந்ததால் தி.மு.க.வால் கதறக்கூட முடியாத நிலை.
ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்கிற பிரம்மாண்ட தொகையை எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் திரும்பத் திரும்ப உச்சரித்தபோது, அந்த வீட்டுக்குத்தானே பாதிப்பு என இந்த வீட்டு ஆட்கள் மனதுக்குள் மகிழ்ந்து மவுனம் காத்தனர். ‘நல்லா மாட்டட்டும்’ என்று தூண்டிவிட்ட கோஷ்டிகளும் உண்டு. தேன் எடுத்தவர்கள் புறங்கையை நக்க, எதுவும் தெரியாததுபோல மற்றவர்கள் ஒதுங்க, எல்லாமும் சேர்ந்து மொத்தமாக பாதித்தது கலைஞரையும் கடைக்கோடி தி.மு.க. தொண்டனையும்தான். காலங்கடந்து ஞானம் பெற்று, அகில இந்திய அரசியல் வரையிலான ஆதரவை தி.மு.க. மீண்டும் மீட்கும் வகையில் இடைத்தேர்தல் வர, அந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளிலேயே 2ஜி வழக்கின் தீர்ப்பும் வெளியாகிறது.
– முகநூல் பதிவில் இருந்து…