ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது..

 


சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

9.40 AM: பல வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும். இது குறித்து தேர்தல் ஆணையரிடம் திமுக சட்ட செயலர் மூலம் புகார் அளிக்கவுள்ளதாகவும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் கூறினார்.

9.25 AM: அதிமுக வேட்பாளர் மதுசூதனன் வண்னாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

9.16 AM: காலை 9 மணி நிலவரப்படி 7.32% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆனையம் அறிவித்துள்ளது.

8.50 AM: ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வாக்கு எண்ணிக்கை நிலவரம் தெரிவிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

8.30 AM: தேர்தல் அமைதியாக நேர்மையாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு உதவி காவல் ஆய்வாளர் 5 காவலர்கள் சிஆர்பிஎஃப் மற்றும் சிஎஸ்ஐஎப் வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். | பலத்த பாதுகாப்பு ஏற்பாடு |

8.15 AM: ரூ.6,000 அல்ல ரூ.60,000 கொடுத்தால்கூட மக்கள் ஏமாறமாட்டார்கள். அதிமுகவுக்கும் இன்னும் பிற கட்சிகளுக்கும் ஆர்.கே.நகர் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என வாக்களித்த பின்னர் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். விரிவான செய்திக்கு: | மருதுகணேஷ் பேட்டி |

8.10 AM: திமுக வேட்பாளர் மருதுகணேஷ், பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
7.55 AM: காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.
7.50 AM: மக்கள் காலை 7.30 மணி முதலே வாக்குச்சாவடிகளுக்கு வரத் தொடங்கினர்.

பலத்த எதிர்பார்ப்பு:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு மருது கணேஷ் (திமுக), இ.மதுசூதனன் (அதிமுக), கரு.நாகராஜன் (பாஜக), கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர் கட்சி), டிடிவி தினகரன் (சுயேச்சை) உட்பட 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அதிமுக தனது பலத்தையும், திமுக மக்கள் மத்தியில் தனது செல்வாக்கையும், டிடிவி தினகரன் தனது தனி அரசியல் கணக்கை துவக்க வேண்டிய நிர்பந்தமும் மிகுந்துள்ளதால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 லட்சத்து 28,234 வாக்காளர்கள்

தொகுதியில் 2 லட்சத்து 28,234 வாக்காளர்கள் உள்ளனர். 50 வாக்குப்பதிவு மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கான மின்னணு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களுடன் தேர்தல் பணியாளர்கள் வாக்குச்சாவடியில் தயார் நிலையில் உள்ளனர். தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு நுண் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பாதுகாப்புக்காக 3,300 போலீஸாரும் 1,500-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினரும் தொகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இடை விடாமல் வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள 12  ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.

மாலை 5 மணிக்கு வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்தால், டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படும்.

24-ல் வாக்கு எண்ணிக்கை:

வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு இயந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான ராணிமேரி கல்லூரிக்கு கொண்டு செல்லப்படும். அங்கு துணை ராணுவத்தினர் உட்பட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும்.

பின்னர் வாக்குகள் எண்ணும் பணி வரும் 24-ம் தேதி நடக்கும்.