தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக கலந்துக்கொண்ட பிரதமர் மோடி, “இந்த உத்வேகம் விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும். இந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது” என்று பேசினார்.
இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டிற்கு முக்கிய பங்கு உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தல், துறைமுக ஆணையத்தில் பல்வேறு திட்டங்களின் தொடக்கம், அடிக்கல் நாட்டுதல், பணிகளைத் தொடங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று (16ம் தேதி) நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக கலந்துக்கொண்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில், மத்திய கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். தமிழ்நாடு அமைச்சர்கள் எ.வ.வேலு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.