இன்குலாப் என்றொரு மானிடனின் இறுதி விருப்பம்!

மக்கள் பாவலர் இன்குலாப் கடந்த 07.02.09ல் எழுதிய கடிதம், 2017ல் மீண்டும் கண்டெடுக்கப்பட்டு, தி இந்து நாளேட்டில் 03.12.2017 அன்று பிரசுரமாகி உள்ளது.

_________________________________________________________________

 

என் தன் நினைவோடு எழுதும் கடிதம். எப்பொழுதும் இறப்பு நேரலாம் என்ற சூழலில் என் இறுதி விருப்பங்களைப் பதிவு செய்கிறேன். என் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி, தோழமைக்குரிய நண்பர்களுக்கும் விடுக்கும் வேண்டுகோள் இது.

என்னை முழுமையாக என் மக்களுக்கு உரிமையாக்க விரும்பினேன். ஆனால், நேர்ந்த வாழ்க்கை அதற்கான  முழு வாய்ப்பையும் தரவில்லை. இறப்பு என்பது வாழ்வின் தவிர்க்க முடியாத கூறு. இறப்புக்குப் பிறகு மறுபிறப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. வாழ்ந்த மட்டும் சமயச்சார்பற்றவனாகவே வாழ்ந்தேன். அதனால் எல்லார்க்குமானவனாக என்னை உணர முடிந்தது. உடலால் வாழ்ந்த இவ்வாழ்க்கை இறப்போடு முடிகிறது. மக்களுக்கு முழுமையாக உரித்தாக்கும் வண்ணமே என் சிந்தனையும் செயலும் அமைய வேண்டும் என விரும்பிய போதிலும், அதை முழுமையாக்க முடியாத குறை என் மனத்தில் உண்டு. இறப்பு உடலின் செயல்களை நிறுத்துகிறது. எனினும், என் உடல் இறப்புக்குப் பின்னரும் பயன்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால், என் உடலை மருத்துவக் கல்லூரிக்கு வழங்க என் குடும்ப உறுப்பினர்களும், தோழர்களும் ஆவண செய்ய வேண்டுகிறேன். அப்படி வழங்குவது என்னை, என் வாழ்க்கையை என் விருப்பப்படி அர்த்தப்படுத்தும் என நம்புகிறேன்.

இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த நான், இவ்வாறு விருப்பம் எழுதி வைப்பது சரியா என்று என் உறவினர்களும், இஸ்லாமிய நண்பர்களும் கருதலாம். மதம் சாராதவனாய் வாழ விரும்பினேன். மதம் சாராதவனாய் மடியவும் விரும்புகிறேன். உறுப்புக் கொடையும், உடற்கொடையும் மானுடத்திற்கு செய்யும் உதவி என்று கருதுகிறேன். எத்தனை முஸ்லிம் மாணவ, மாணவியர் மருத்துவம் பயில்கின்றனர்! உடற்கூறு சோதனையின்றியும், பயிலாமலும் மருத்துவக் கல்வி நிறைவு பெறுமா? எனவே, சமயம் சார்ந்தவர்கள் இக்கொடையைகளைத் தயங்காமல் வழங்க வேண்டும் என்பது வேண்டுகோள்.

வாழ்வது இனிமையானது – போராட்டங்களோடும் புன்னகையோடும்

இறப்பது நிறைவானது – நம்பிக்கையோடு. 

அன்புடன்

இன்குலாம் (செகாசீ.சாகுல் அமீது)

– நன்றி தி இந்து தமிழ்