உ.பியில்’குற்றமும் கரோனாவும் கை மீறி போய் விட்டது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு..

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சரிவடைந்து கொண்டே வருகிறது, காட்டாட்சிதான் வளர்ந்து வருகிறது என்று பிரியங்கா காந்தி வதேரா குற்றம் சாட்டியுள்ளார்..

புலந்த்ஷெஹர் வழக்கறிஞர் தர்மேந்திர சவுத்ரி ஜூலை 25ம் தேதி மாயமானார், இவர் கடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் அவரது இருசக்கர வாகனம் ஒரு இடத்தில் கவிழ்ந்து கிடந்ததை போலீசார் கண்டுப்பிடித்தனர்.
காட்டுப்பகுதியில் ட்ரோன்களை விட்டு வழக்கறிஞரின் உடல் தேடபட்டு வந்தது, இந்நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டதையடுத்து பிரியங்கா காந்தி வதேரா உத்தரப் பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு சரிந்து விட்டது என்று யோகி ஆதித்யநாத் அரசு மீது விமர்சனம் வைத்தார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, “உ.பி.யில் காட்டாட்சி வளர்ந்து வருகிறது. குற்றமும் கரோனாவும் கையை மீறி போய்க்கொண்டிருக்கிறது.

வழக்கறிஞர் தர்மேந்திர சவுத்ரி கடத்தப்பட்டு 8 நாட்கள் ஆன நிலையில் நேற்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. கான்பூர், கோரக்பூ, புலந்த்ஷெஹர் என்று ஒவ்வொரு சம்பவத்திலும் சட்டம் ஒழுங்கு மந்தமாக செயல்படுகிறது.

காட்டாட்சியின் அறிகுறிகள் தெரிகின்றன. எத்தனை நாட்களுக்குத்தான் இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கப் போகிறது” என்று அவர் இந்தி மொழியில் ட்வீட் பதிவில் விமர்சனம் செய்துள்ளார்.