உ.பி. தேசிய அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து: 16 பேர் உயிரிழப்பு..

உ.பி.மாநிலம் ரே பரேலியின், உன்சஹாரில் உள்ள தேசிய அனல் மின்நிலையத்தில் (என்.டி.பி.சி) பாய்லர் டியூப் வெடித்ததில் 16 பேர் பலியாகி, சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

உத்தரப் பிரதேச ஏடிஜிபி ஆனந்த் குமார் கூறுகையில், இதுவரை 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

உள்துறை முதன்மைச் செயலரை மீட்புப் பணிகளை மேற்பார்வையிடுமாறு அறிவுறுத்தியுள்ளார். பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணமும் பலத்த காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணமும், காயமடைந்த மற்றவர்களுக்கு ரூ.25,000 நிவாரணமும் அறிவித்துள்ளது மாநில அரசு.

32 பேர் அடங்கிய என்.டி.ஆர்.எஃப். அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஏடிஜிபி கூறும்போது, “முதற்கட்ட விசாரணையின் படி சாம்பல் சேர்ந்ததால் ஏற்பட்டுள்ள அழுத்தத்தினால் பாய்லர் வெடித்துள்ளதாக தெரிகிறது, இப்படி நடந்திருக்கக் கூடாது. பாய்லர் அடுப்பில் சாம்பல் அளவுக்கதிகமாக சேர்ந்ததால் அழுத்தம் அதிகரித்துள்ளது, இதனால் வெடித்தது என்று என்.டி.பி.சி நிர்வாகம் தெரிவித்தது. என்டிபிசி அதிகாரிகளே விசாரணை மேற்கொள்வார்கள்” என்று தெரிவித்தார். இந்த பாய்லர் 6 மாதங்களுக்கு முன்பாகத்தான் நிர்மாணிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

துரதிர்ஷ்டமான சம்பவம் என்று வர்ணித்த என்டிபிசி, “உன்சஹாரில் உள்ள தேசிய அனல்மின் நிலையத்தின் 6-யூனிட்டில் இந்த விபத்து ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளது.