குமரி அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஓகி புயலாக விஸ்வரூபம் எடுத்தது. ஓகி புயல் குமரி மாவட்டத்தையே குப்புறப்புரட்டிப்போட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் காற்றில் சாய்ந்தன.
ஓகி புயலால் மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் பயங்கர காற்று வீசியது. இதில் 10,000க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்லாயிரக்கணக்கான மின் கம்பங்களும் சாய்ந்தன. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் அடியோடு முடங்கியது.
கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விழுப்புரம், காஞ்சிபுரம் சென்னை, சேலம், திருவண்ணாமலை, திருவள்ளூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று(டிச.,01) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோயில், மானாமதுரை, இளையான்குடி மற்றும் திருப்புவனம் ஆகிய 5 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், பணகுடி, வள்ளியூர் பகுதிகளில் சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியி்ல பெய்யும் கனமழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இதனால், சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில், மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல், நாட்டுப்படகுகளை தேங்காய்ப்பட்டினம் பகுதியில் நிறுத்திவைத்திருந்தனர். முட்டத்திலும் இதேபோல் படகுகளை மீனவர்கள் நிறுத்தி வைத்திருந்தனர். கடல் சீற்றத்தின் காரணமாக நீரில் மூழ்கும் நிலைக்குச் சென்ற படகுகளை மீனவர்கள் மீட்டு வருகின்றனர்.
இதனிடையே கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களையும் ஓகி புயல் தாக்கியுள்ளது. பயங்கரமாக வீசிய காற்றால் படகுகள் பல நடுக்கடலில் கவிழ்ந்தன. இதில் 4 மீனவர்கள் பலியாகினர். அவர்களது உடல்கள் இன்னமும் கிடைக்கவில்லை. மேலும் 17 மீனவர்களின் கதி என்ன என்பதும் தெரியவில்லை. இவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.