கறுப்புப் பணம் கொண்டுவந்தீர்களா?: மோடியை கிண்டலடித்த ராகுல்..


சுவிட்சர்லாந்திலிருந்து கறுப்புப் பணத்தை மீட்டு கொண்டுவந்தீர்களா என பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல்காந்தி கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக தனது தேர்தல் அறிக்கையில், சுவிட்சர்லாந்து வங்கிகளில் தேங்கிக்கிடக்கும் கறுப்புப் பணத்தை மீட்டால், ஒவ்வொரு இந்தியரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைக்கும் அளவுக்கு பணம் இருக்கும் எனக் கூறியிருந்தது.

இதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில், ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள பிரதமரே, சுவிட்சர்லாந்திலிருந்து திரும்பிய உங்களை வரவேற்கிறோம். அதேவேளையில் அந்த கறுப்புப் பணத்தைக் குறித்தும் அப்படியே நினைவுபடுத்திவிடுகிறேன். ஏனென்றால், இங்கே இந்திய இளைஞர்கள் நீங்கள் சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பும்போது உங்களுடன் விமானத்தில் ஏதாவது (மீட்கப்பட்ட கறுப்புப் பணம்) கொண்டு வந்திருப்பீர்கள் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என கிண்டல் செய்துள்ளார்.

ஏற்கெனவே, குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் ராகுல்காந்தி ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைப்பதாக பாஜக கூறியதாக சொல்லப்பட்டதை கேள்விக்குள்ளாக்கினார். இப்போது அதை கேலிக்குள்ளாக்கியுள்ளார்