காணாமல் போன மீனவர்கள்: குமுறும் குமரி மீனவர்கள்!

கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களை மீட்பதில் அரசுகள் மெத்தனம் காட்டுவதுடன் போலியான தகவல்களையும் தருவதாக கூறி , கன்னியாகுமரி மீனவர்கள்  போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் காரணமாக தற்போதைய நிலவரப்படி ஆயிரத்து 13 மீனவர்கள் மாயமாகியிருப்பதாகவும் தப்பி வந்த மீனவர்கள் கொடுத்த தகவலின் படி 60 மீனவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.

மாயமான மீனவர்கள் குறித்த அரசின் பட்டியலுக்கும் உண்மை நிலவரத்துக்கும் வேறுபாடு இருப்பதாக புகார் தெரிவிக்கும் மீனவர்கள் அந்தந்த கிராமங்களில் இருந்து காணாமல் போன மீனவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வலியுறுத்தி, மீனவ கிராமங்களில் உள்ள பெண்கள் சாலையில் அமர்ந்து அழுது துக்கப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று (புதன் கிழமை) நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தத் தீர்வும் எட்டப்படாத நிலையில் இறையுமன்துறை முதல் நீரோடி வரையான 8 கிராம மீனவர்களும் ரயில் மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று ரயில் மறியல் போராட்டத்துக்காக குழித்துறை ரயில் நிலையத்துக்கு சின்னத்துறையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட மீனவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதையடுத்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வள்ளவிளை, மார்த்தாண்டம் துறைப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர்.