காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 25-ம் தேதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..


அந்தமான் அருகே வரும் 25-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ”தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துவிட்டது. இந்நிலையில் வரும் 25-ம் தேதி காலகட்டத்தில் தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடும்படியாக எங்கும் மழை பதிவாகவில்லை” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.