கூடுதல் ஜிஎஸ்டி வசூல்: புகார் செய்யலாம்… ஆனா அது அத்தனை எளிதல்ல!

ஜிஎஸ்டி வரி அதிகமாக வசூலிக்கப்பட்டால் புகார் செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கான வழிமுறை அத்தனை எளிதாக இல்லை. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இன்புட் கிரெடிட் டாக்ஸ் – அவர்களால் செலுத்தப்படும் ஜிஎஸ்டி வரியில்  திரும்ப வாங்குவதற்கான அளவு- குறித்த விவரம், நிறுவனத்தின் பதிவு விவரங்கள், புகார் செய்யும் நபரின் அடையாளம் மற்றும் முகவரிச் சான்று இத்தியாதிகளும் உங்கள் கையில் இருக்க வேண்டும். தேசிய கொள்ளை லாபத் தடுப்பு ஆணையம் (National Anti-Profiteering Authority) என்ற அமைப்பிடம் இந்த ஆவணங்களுடன்  அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து புகாரை  அளிக்க வேண்டும். இந்த அமைப்பு மூன்று அடுக்குகளைக் கொண்டது.  முதலில் மாநிலக் கமிட்டி, அதன் பின்னர்  நிலைக்குழு, இறுதியில் தேசிய அளவிலான அமைப்பு என மூன்று நிலைகளில்  உங்களது புகாரின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு நடத்தப்படும். கொள்ளை லாபத் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் இந்த புகார் மனுவை பரிசீலித்த பின்னர்,  நிறுவனத்திடம் விசாரணை தொடங்கப்படுமாம்! இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால்  அந்தப் புகார் படிவத்தை பூர்த்தி செய்யவே வரி வல்லுநர்களின் உதவி தேவை என்கிறார்கள் துறை சார்ந்த தணிக்கையாளர்கள்…. இனிமே ஜிஎஸ்டி பற்றி புகார் பண்ண நெனப்பீங்க…