தென் ஆப்பிரிக்கா உடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று கேப்டவுனில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் பேப் டு பிளஸ்சி பேட்டிங் தேர்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து பேட்டிங்கைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில் பேப் டு பிளிசிஸ் மற்றும் டிவில்லியர்ஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டு பிளிசிஸ் 62 ரன்களிலும், டிவில்லியர்ஸ் 65 ரன்களிலும் அவுட்டாகினர். மற்ற வீரர்கள் எதுவும் பெரிதாக சோபிக்காததால் தென்னாப்பிரிக்கா அணி 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல்அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்களை தொடர்ச்சியாக இழந்தது. 92 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார்.
சிறப்பாக விளையாடிய பாண்டியா 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து, சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். இதைத் தொடர்ந்து, 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் சார்பாக ரபாடா, பிலேந்தர் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ஸ்டெயின் மற்றும் மார்க்கல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, தற்போது தென் ஆப்பிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 77 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.