ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவை நேரில் விசாரணை நடத்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து, தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட 130-க்கும் அதிகமானோரிடம், இதுவரை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது.
இதனிடையே, ஜெயலலிதா மரணம் குறித்து விளக்கம் அளிக்க, பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா தரப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோரப்பட்டது. இதனை தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக 55 பக்கங்கள் கொண்ட பிரமானப் பத்திரம் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், சசிகலாவிடம் நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழக உள்துறைக்கும், பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிக்கும் விசாரணை ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.