சீறிய உயர்நீதிமன்றம்: சிதறிய செவிலியர் போராட்டம்!

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, திங்கள் கிழமை முதல் நடைபெற்று வந்த செவிலியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்களாக டி.எம்.எஸ். வளாகத்தில் செவிலியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வந்தனர். 90 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்த நிலையில், செவிலியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்தது. அதன் பின்னரும் கலைந்து செல்ல மறுத்து, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதனிடையே, ஆவடியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் அமர்வு, செவிலியர்கள் உடனடியாக போராட்டத்தைக் கைவிட உத்தரவிட்டது. விசாரணையின் போது, மருத்துவத்துறையினர் போராட்டத்தில் ஈடுபடுவதை ஒரு போதும் ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளை விடுத்து அப்போலோ போன்ற தனியார் மருத்துவமனைகளுக்கா செல்ல முடியும் எனவும் கேள்வி எழுப்பினர். அப்போது, செவிலியர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாதம் 7 ஆயிரத்து 400 ரூபாய் ஊதியத்திற்கு வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு இதுவரை ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை என்று முறையிட்டார். தற்போதைய சூழலுக்கு இந்த சம்பளம் போதாது என்றும், எனவே காலமுறை ஊதியம் வழங்குமாறு செவிலியர்கள் தரப்பில் கோரப்படுவதாகவும் அவர் எடுத்துரைத்தார். இதை மறுத்த நீதிபதிகள், ஊதியம் குறைவென்றால் வேலையை விட்டு விலகலாமே தவிர, போராட்டம் நடத்துவது சரியான நடைமுறையல்ல என்று கூறினர்.

மேலும் போராட்டத்தைக் கைவிடும் வரை, செவிலியர்களின் வாதத்தை தாங்கள் கேட்கத் தயாராக இல்லை என்றும் நீதிபதிகள் கூறினர். மேலும், இந்தப் போராட்டம் சட்டவிரோதமானது என்பதால், செவிலியர்கள் அதனைக் கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அரசு தரப்பில் செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் ஆணையிட்டனர். பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையிட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து செவிலியர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாகக் கூறி டிஎம்எஸ் வளாகத்தில் இருந்து கலைந்து சென்றனர்.