சென்னையில் நிலத்தடி பன்னடுக்கு வாகன நிறுத்த மேலாண்மைத் திட்டம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் ஒருங்கிணைக்கப்பட்ட நிலத்தடி, பன்னடுக்கு வாகன நிறுத்த மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:

2 லட்சம் நான்குசக்கர வாகனங்கள், 2 லட்சம் இருசக்கர வாகனங்களை நிறுத்தக்கூடிய அளவில், நிலத்தடி வாகன நிறுத்த வசதிகள், பன்னடுக்கு வாகன நிறுத்த வசதிகள் மற்றும் சாலையோர திறன்மிகு வாகன நிறுத்தம் ஆகியவை ஏற்படுத்தப்படும்.

இதற்காக விரிவான ஒருங்கிணைக்கப்பட்ட வாகன நிறுத்த மேலாண்மை திட்டம், அரசு-தனியார் பங்களிப்பு முறையின் கீழ், 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சென்னை நகரில் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம், இத்திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை அளிக்கும்.

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆற்றங்கரையோரம் வசித்து வரும் ஏழைக் குடும்பங்களுக்கு மிகச்சிறந்த மறுகுடியமர்த்தும் நடைமுறைகள் பின்பற்றப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி உதவியுடன் 4 ஆயிரத்து 647 ரூபாய் செலவில், 38 ஆயிரம் குடியிருப்புகளை அமைப்பதற்காக நகர்ப்புற ஏழை மக்களுக்கான தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவத்தார்.