சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்..

சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தியாகராய நகரிலுள்ள ரங்கநாதன் தெருவில் பல்வேறு துணிக்கடைகள், பாத்திரக் கடைகள் என பல கடைகள் இருப்பதால் எப்போதும் பரபரப்பாகவே காட்சியளிக்கும். அதிலும், விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும்.

இந்நிலையில், ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு இன்று (சனிக்கிழமை) மதியம் வந்த தொலைபேசி அழைப்பில், அக்கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, கடை நிர்வாகத்தினர் காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

இதன்பின், அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. ஆறு தளங்கள்கொண்ட சரவணா ஸ்டோர்ஸ் கடையில், வெடிகுண்டு இரு குழுக்களாக பிரிந்து, மேல் தளத்தில் ஒரு குழுவினரும், கீழ் தளத்தில் ஒரு குழுவினரும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, காவல் துறையினர் சரவணா ஸ்டோர்ஸில் பணிபுரிந்துவரும் ஆயிரக்கணக்கான ஊழியர்களையும், பொதுமக்களையும் கடையிலிருந்து வெளியேற்றினர். மேலும், அருகிலுள்ள கடைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாதபடியும், சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு முன்பு பொதுமக்கள் கூடாதபடியும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு வந்த மர்ம தொலைபேசி மிரட்டல் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்ததாக தெரியவந்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து இன்ன பிற விவரங்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டலால் அப்பகுதியில் சிறிது பதற்றம் நிலவி வருகிறது.