செல்போன்களில் இருந்து சீன செயலிகளை நீக்க இந்திய ராணுவத்தினருக்கு உத்தரவு!

ஆன்ட்ராய்டு செல்போன்களில் ஆப் மூலம் வைரஸ்களைப் பரப்பி தகவல்களைத் திருடும் மால்வேர் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. ராணுவத்தைப் பொறுத்தவரை இது பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, ட்ரூ காலர், வி சேட் போன்ற செயலிகள் சீன நிறுவனங்களின் தயாரிப்பு என்பதால், இவற்றின் மூலம் ராணுவம் தொடர்பான தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதிலும், எல்லையில் உள்ள ராணுவ வீரர்கள் ஆன்ட்ராய்டு போன் வைத்திருந்தால், அதில் உள்ள ட்ரூ காலர், வி சேட் செயலிகள் மூலம் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும் , தாக்குதல் நடத்துவதற்கு இதைவிட வேறு என்ன வசதி வேண்டும். அதனால்தான், இந்திய ராணுவ வீரர்கள் தங்களது செல்போன்களில் உள்ள ட்ரூ காலர், வி சேட் ஆகிய சீன செயலிகளை உடனடியாக நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சீனாவின் ஸியோமி ஸ்மார்ட்போன் மூலம் சீன அதிகாரிகள் உளவு பார்க்க வாய்ப்பிருப்பதால் அதை விமானப் படையினரும், அவர்களது குடும்பத்தினரும் பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், எல்லைப் பாதுகாப்புப் படையினர் எங்கு உள்ளனர்? அவர்களின் அடுத்த கட்ட நகர்வு எங்கு என்பது உள்ளிட்ட பல ரகசிய தகவல்கள் சீனாவால் உளவு பார்க்கக் கூடும் என இந்திய உளவு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.