ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தலைவரை முகமூடி அணிந்திருந்த மர்ம நபர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் நடுவே அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது.
தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, ஏபிவிபி உறுப்பினர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் மற்றும் மற்ற மாணவர்கள் கடுமையாக காயமடைந்ததாக ஜேஎன்யு மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
டிவிட்டரில் வெளியாகும் விடியோக்களில், ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் பலத்த காயத்துடன் தென்படுகிறார்.
அந்த விடியோவில், “முகமூடி அணிந்த குண்டர்களால் நான் கடுமையாகத் தாக்கப்பட்டேன். எனக்கு ரத்தம் வழிகிறது. நான் கடுமையாகத் தாக்கப்பட்டேன்” என்கிறார்.
இதுகுறித்து நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தன்படி, முகமூடி அணிந்திருந்த 50 பேர் மாணவர்களையும், ஆசிரியர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
மேலும், அவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும் தெரிகிறது.