ஜெ.,மரணம் தொடர்பான விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் :ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி..

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை அக்டோபர் 30-ம் தேதி தொடங்க உள்ளதாக விசாரணை ஆணையத் தலைவர் ஆறுமுகசாமி அறிவித்துள்ளார். விசாரணையை, போயஸ் கார்டனில் இருந்து தொடங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்தாண்டு செப். 22-ம் தேதி இரவு 10.30 மணிக்கு உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 70 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், டிசம்பர் 5-ம் தேதி காலமானார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நிலையில், மத்திய அமைச்சர்கள், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்தாலும் ஜெயலலிதாவைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், அதிமுகவில் தனி அணியை உருவாக்கிய தற்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அதே போல் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித்தலைவர்களும், உறவினர் தீபாவும் கோரிக்கை வைத்திருந்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. அதற்கு சில தினங்கள் முன், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையத்துக்கு, சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள கல்சா மகாலில் முதல் தளத்தில் இடம் ஒதுக்கப்பட்டது. இதை நேற்று நீதிபதி ஆறுமுகசாமி பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, வரும் அக்.25- முதல் அவர் விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் அன்று விசாரணையை ஆறுமுகசாமி துவக்கவில்லை. இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஆணையத்தலைவர் ஆறுமுகசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அக்டோபர் 30-ம் தேதி முதல் தான் விசாரணையை துவக்க உள்ளதாக தெரிவித்தார்.
திங்கட்கிழமை போயஸ் இல்லத்திலிருந்து விசாரணை துவக்க உள்ளதாக தெரிவித்தார். விசாரணை வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும் என தெரிவித்த ஆணையத்தலைவர் ஊடகங்கள் ஒத்துழைத்தால் உரிய காலத்திற்குள் விசாரணையை முடிக்க முடியும் என்று தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெயலலலிதா மரணம் தொடர்பாக அரசு ஒருநபர் ஆணையத்தை அமைத்துள்ளது. அதன் ஆணையத்தலைவராக நான் செயல்பட போகிறேன், எனக்கு அரசு குறிப்பிட்ட கால அளவு ஒதுக்கியுள்ளது அதன் கால அளவுக்குள் விசாரணையை முடிக்க உள்ளேன்.
ஜெயலலிதா மரணம் குறித்த தகவல் அளிப்பவர்கள் தம்மிடம் நேரிலோ அல்லது பதிவு தபாலிலோ அளிக்கலாம். நவ.22 க்குள் இது போன்ற தகவல்களை அளிக்கலாம் என்று தெரிவித்துள்ள அவர் விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் என தெரிவித்துள்ளார்.