ஜெ.,வின் வேதா இல்லத்தை கையகப்படுத்த இழப்பீடு தொகை ரூ.67.9 கோடி தமிழக அரசு… செலுத்தியது …

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நிலையில், அவர் வசித்து வந்த போயஸ் தோட்ட வீடு நினைவு இல்லமாக்கப்படும் என்று, 2017-ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

இதனையடுத்து, ஜெயலலிதா, வாழ்ந்த வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, கையப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழக அரசு நினைவில்லமாக்க அவசர சட்டத்தையும் பிறப்பித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள போயஸ் கார்டன் குடியிருப்பு வாசிகள், ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்பட்டால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும், தங்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருப்பினும், அரசின் கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே, ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகள் என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் ஆகிய இருவரில் தீபக் மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதில், நிலம் கையகப்படுத்தும் முடிவில் தன்னுடைய கருத்தை பதிவு செய்வதற்கு எவ்வித வாய்ப்பும் வழங்கப்படவில்லை, எனவே கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

தொடர்ந்து, ஜெயலலிதா தரப்பில் ரூ.36 கோடி வரி பாக்கி இருப்பதால், நிலம் கையப்படுத்தும் நடவடிக்கைக்கு வருமான வரித்துறை எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், வேதா இல்லத்தை கையகப்படுத்த இழப்பீடு தொகையாக ரூ.67.9 கோடி தமிழக அரசு செலுத்தியுள்ளது.

வேதா இல்லத்தை கையகப்படுத்த இழப்பீடு தொகையை தமிழக அரசு சென்னை சிவில் உரிமையில் நீதிமன்றத்தில் செலுத்தியது.

ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் ரூ.36.9 கோடியை செலுத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.