ட்விட்டரில் புண்படுத்தும் ட்ரோல்களே…. ஒரு நாள் மனம் திருந்துவீர்கள்: ராதிகா மகள் உருக்கம்

ட்விட்டரில் தன்னை மனம் புண்படும் படியாக கிண்டலடிப்பவர்கள், ஒரு நாள் தங்களது பாதுகாப்பற்ற தன்மையை உணர்ந்து அன்பைப் பரப்பத் தொடங்குவார்கள் என ராதிகாவின் மகள் ரயான் உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ராதிகாவின் மகள் ரயான் தனது மகன் மற்றும் குடும்பத்தாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் சிலர் மோசமாக விமர்சித்துக் கிண்டல் செய்த நிலையில் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
பொதுவாக இது போன்ற ட்ரோல்களை எதேச்சையாக கவனித்தால்கூட அவற்றை நான் இரண்டாவது முறையாக பார்ப்பதில்லை.
இதுபோன்று நிறையவே வந்துவிட்டன. நான் சிறு பிள்ளையாக இருந்தபோதே இத்தகைய விமர்சனங்களை சந்தித்துவிட்டேன். அது என் கல்யாணத்தின்போதும் நீண்டது. இப்போது, எனக்கு குழந்தை பிறந்திருக்கிறது. இப்போதும் அதையே சொல்கிறார்கள். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
ஒரு திருமண பந்தத்தை முறித்துக் கொண்டு வெளியேற நிறையவே சுயமரியாதையும், துணிச்சலும் தேவைப்படுகிறது. அதுவும் கைக்குழந்தையுடன் அத்தகைய பந்தத்தை முறித்துச் செல்வது என்பது எளிதானதல்ல. அதற்கு தன்னம்பிக்கை அதீதமாகத் தேவைப்படுகிறது. அத்துடன் மனத்திடமும் தேவைப்படுகிறது.
ஒரு தொழிலை அடிமட்டத்திலிருந்து கட்டமைத்து அதை வெற்றிகரமாக தொழிலாளாக மாற்றிய என் தாய் ஒரு சூப்பர்வுமன்.
அதேபோல் எல்லா ஆணும் பிள்ளை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அடுத்தவர் குழந்தையையும் தன் குழந்தையைப் போலவே பாசம் காட்டி வளர்க்க உண்மையான ஆணால் மட்டுமே முடியும். அவர்தான் எனது தந்தை.
என் தாய் வேண்டும் என்றால் என்னையும் சேர்த்தே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் ஒரு பேக்கேஜ் டீல் போல் அவர் என்னை ஏற்கவில்லை. அவரது கண்களில் நான் எப்போதுமே சுமையாகத் தெரிந்ததில்லை. மாறாக அவர் கண்களில் நான் போனஸாகத் தெரிந்தேன். ஒரு வலிமையான ஆண்மகனால் தான் அப்படி எண்ண முடியும்.
பந்தம் என்பது யாருடைய டிஎன்ஏ, யாருடன் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதல்ல அது முற்றிலும் அன்பால் நிறைந்தது. உறவுக்குத் தரும் உத்திரவாதத்தால் நிறைந்தது. எல்லாமே தவறாகும்போது நான் இருக்கிறேன் என்று துணை நிற்றலில் இருக்கிறது.
குடும்பம் என்பது எப்போதும் ரத்தம் சார்ந்ததாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களை தனது சொந்தமாக ஏற்றுக்கொண்டு உங்களது மகிழ்ச்சியை உறுதி செய்ய தன்னை முழுமையாக அர்ப்பணித்து என்ன நடந்தாலும் உங்கள் மீது அன்பை செலுத்தும் உறவுகள் நிறைந்ததே குடும்பம். நாங்கள் அப்படிப்பட்ட உணர்வால் ஒன்றிணைந்த குடும்பம். நாங்கள் மகிழ்ச்சியாகவும் உறுதியாகவும் இருக்கிறோம்.
அதனால், என்னை இப்படி கலாய்க்கும் ட்ரோல்களே ஒருநாள் நீங்கள் உங்கள் பாதுகாப்பற்ற உணர்விலிருந்து மீண்டு வெறுப்புக்குப் பதிலாக அன்பை பரப்புவீர்கள் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு ரயான் அதில் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து இளவரசி அரசியலில் குதித்தார் : அரசர் கடும் எதிர்ப்பு..

இந்து பத்திரிகை மீது சீறிப்பாயும் நிர்மலா சீதாரமான்: ஏஎன்ஐக்கு அளித்த பேட்டி

Recent Posts