தஞ்சையில் புதிதாக கட்டப்பட்டிருந்த ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீலகண்டன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், தேசிய நெடுஞ்சாலைத்துறை முறையான அனுமதி வழங்கும் வரை, ரயில்வே மேம்பாலத்தை திறக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பாலம் நாளை திறந்து வைக்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் விரிசல் ஏற்பட்டது .இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில், அதனை அவசர அவசரமாக ஜல்லியைக் கொண்டு பொதுப்பணித்துறையினர் சீரமைத்தனர். ஆனால், பாலத்தின் தரம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதால், அதனைத் திறக்கக் கூடாது எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக நீலகண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, பாலத்தைத் திறக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு இந்தப் பாலத்தைக் கட்டுவதற்காக 52 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், 28 மாதங்களில் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு மாறாக நான்கு ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு பின்னர் பாலம் கட்டப்பட்டிருப்பதாகவும் மனுதாரர் தமது புகாரில் கூறியுள்ளார். அவசர கோலத்தில் கட்டப்பட்ட இந்தப் பாலம், தேவையான அகலம் இன்றி குறுகலாக கட்டப்பட்டிருப்பதால், விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அதில் முறையிடப்பட்டுள்ளது. மேலும், புதிதாக கட்டப்பட்ட நிலையில், சாலையில் விரிசல் ஏற்பட்டதால், அதன் உறுதித் தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.