ஏழரை கோடி தமிழக மக்களின் உணர்வுகளை ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் பிரதிபலித்துள்ளதாக சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை ஆர்.கே நகரில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரன் 10,421 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும், எனக்காக பணியாற்றிய தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஏழரை கோடி தமிழக மக்களின் உணர்வுகளை ஆர்.கே நகர் முடிவுகள் பிரதிபலித்துள்ளன.
தமிழகம் முழுவதும் நான் சென்ற இடங்களில் எல்லாம் குக்கர் சின்னம் வெற்றி பெரும் என்று கூறினர். சின்னம் கட்சி பெயர் யாரிடம் இருப்பது என்பது முக்கியமல்ல, மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதே வெற்றியை தரும். ஜெயலலிதாவுக்கு அடுத்து யார் என்பதை மக்கள் தீர்மானித்துள்ளனர்.
இவ்வாறு தெரிவித்தார்.