தமிழக மக்களின் தாயாக மாறியவர் அம்மா: முதல்வர் எடப்பாடி பழனிசாமி..


தமிழக மக்களின் தாயாக இருந்தவர் புரட்சித்தலைவி அம்மா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. அப்போது, தேர்தல் அறிக்கையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண்களுக்கு மானிய விலையில் கியர் இல்லாத ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளான இன்று இந்த திட்டத்தை துவக்கி வைக்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் இதனை தொடங்கிவைத்தார். மேலும், அரங்கின் நுழைவாயில் 70 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வைக்கும் திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார். இவரைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து மரக்கன்று நட்டு வைத்தனர். தொடர்ந்து மோடியை வரவேற்று பேசிய முதல்வர் கூறுகையில், தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர் ஜெயலலிதா.

தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் தாயாக மாறியவர். தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டின் பக்கம் உலகத்தை திரும்பிப் பார்க்கச் செய்தவர். தமிழ் மொழியை பாராட்டி பேசிய மோடிக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்க நடவடிக்கை எடுக்க தமிழக மக்களின் சார்பாக பிரதமருக்கு கோரிக்கை வைக்கிறேன் என்றார்.