தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண் உயர்வு: தமிழக அரசு திடீர் நடவடிக்கை

தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண்கள் 30-ல் இருந்து 40 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 550க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. 12-ஆம் வகுப்பின் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய 3 பாடங்களில் குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்கள் கொண்டு, பொறியியல் படிப்பதற்கான தகுதி மதிப்பெண்கள் கணக்கிடப்படும். இதில், பொது பிரிவினர் 50 சதவீதமும், பிற்படுத்தப்பட்டவர்கள் 45 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 40 சதவீதமும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது விதிமுறையாக இருந்தது. அதன் பின் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்வார்கள்.

இந்த நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், தகுதி மதிப்பெண்களை மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது பொதுப் பிரிவினருக்கு 45 சதவீதமும், மற்ற அனைத்து பிரிவினருக்கும் 40 சதவீதமும் தகுதி மதிப்பெண்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் 2019-2020 கல்வி ஆண்டில் இருந்து, புதிய தகுதி மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.