திருமணத்திற்காக சிறுமிகள் கடத்தப்படுவதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 18 வயது வரையிலானவர்கள் 54 ஆயிரத்து 328 பேர் கடத்தப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் தென்னிந்தியாவில் திருமணத்திற்காக சிறுமிகளை கடத்தியதாக பதிவான வழக்குகளில் தமிழகமே முதலிடத்தில் உள்ளது.
இந்தியா முழுவதும் 18 வயதிற்குட்பட்ட சிறுமியர் 39 ஆயிரத்து 842, சிறுவர்கள் 14 ஆயிரத்து 486 பேர் என வெறும் ஓராண்டில் கடத்தப்பட்ட 54 ஆயிரத்து 328 பேரில் வழக்கம்போல் சிறுமிகளே அதிகம். இவற்றில் 1,588 சிறுமிகள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாகவும், 228 சிறுமிகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள குற்ற ஆவண காப்பகம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. திருமணத்திற்காக 18 வயதிற்கு மேற்பட்ட 878 பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
ஆனால் 12ல் இருந்து 18 வயது வரை உள்ள சிறுமிகளில் 1063 பேர் கடத்தப்பட்டுள்ளனர். தென்மாநிலங்களில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளாவை விட தமிழகத்தில் திருமணத்திற்காக சிறுமிகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. 18 வயது நிறைவாகாத சிறுமியர் விரும்பியே திருமணத்திற்காக சென்றாலும், அது இந்திய தண்டனை சட்டம் 360ன் கீழ் கடத்தல் வழக்காக பதிவாவதை சுட்டிக்காட்டும் குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர்கள், குழந்தைகள் வளரும் சூழலை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் எனவும், பாலியல் கல்வியின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.