நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.
அவர் நடித்துள்ள அசுரன் திரைப்படத்துக்கு சிறந்த தமிழ் படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
67-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக அசுரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இன்று 67-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் இவை. கடந்த வருடம் கரோனா நெருக்கடியால் கிட்டத்தட்ட ஒரு வருடம் தாமதமாக இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. புதுடெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக ’அசுரன்’ தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அசுரன்’. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதுபோல் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விசுவாசம் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் இமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.