தேனீர் விற்றவர் பிரதமராவது சாதாரணமானதல்ல: மோடிக்கு இவாங்கா ட்ரம்ப் புகழாரம்!

ஹைதராபாத்தில் நடைபெறும் மூன்றுநாள் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டை, பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகள் இவாங்காவும் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய இவாங்கா மோடிக்கு புகழாரம் சூட்டுவதில் இருந்தே தமது உரையைத் தொடங்கினார். அவர் பேசியதாவது:

தேநீர் விற்கும் நிலையில் இருந்து நாட்டின் பிரதமர் பதவி வரை உயர்ந்திருக்கும் மோடி, மனிதர்கள் எத்தகைய மாற்றத்தையும் நிகழ்த்த முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

உற்சாக வரவேற்பு அளித்த இந்திய மக்களுக்கு நன்றி. மோடியின் தலைமையின் கீழ், 130 கோடி மக்களை கொண்ட இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் உலகளவில் பல கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றனர். இந்தியா மிக உண்மையான நட்பு நாடு என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். வேகமாக வளர்ந்து வரும் ஐ தராபாத் நகரில உலக தொழில் முனைவோர் மாநாடு நடந்து வருகிறது. உலகளவில் பிரபலமான பிரியாணி ஐதராபாத்தில் தயாரிக்கப்படுகிறது. அமெரிக்க மக்களின் கனவை நினைவாக்கும் பணியில் என்னை இணைத்து கொண்டுள்ளேன். உலகளவில் பெண் தொழில் முனைவோர் எண்ணிக்கை, 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில், 1.10 கோடி பெண் தொழில் முனைவோர் உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார். 

பின்னர் உரையாற்றிய மோடி, “வணிகத் தொடர்புக்கு ஏதுவான நாடாக இந்தியாவை மாற்ற, அதற்கு தடையாக இருந்த ஆயிரத்துக்கும் மேலான சட்டங்களை நீக்கியுள்ளோம். அந்நிய முதலீட்டுக்கு சிக்கலாக இருந்த 87 சட்டங்களை எளிமைப்படுத்தி உள்ளோம். ஆயுர்வேதத்தையும், யோகாவையும் உலகுக்கு வழங்கியது பண்டைய  இந்தியா என்றால், நவீன இந்தியா புதுமைகளையும், தொவில்வாய்ப்புகளையும் வழங்குகிறது” என்றார்.

இந்த மாநாட்டில் பன்னாட்டுத் தொழில் முனைவோர், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.