தேவயானி விவகாரமும் சில காட்சிப் பிழைகளும்

 

Devyani_Khobragade 2நாடே அலருகிறது.india symbol

தேவயானி கோப்ரகாடே என்ற அந்த துணைத்தூதரக அதிகாரிக்காக, இந்தியாவே போர்க்கோலம் பூண்டது போல் காட்சியளிக்கிறது.

அமெரிக்காவுக்கு எதிராக இத்தனை உரத்த குரலில் இந்தியா பேசும் என்று யாரும் எண்ணிப்பார்த்திருக்க முடியாது.

90 களின் இறுதியில் உலகமயத்தின் பெயரால், வர்த்தக வடிவத்தில் தன் ஆக்டோபஸ் கரங்களை இந்தியாவுக்குள் நீட்டியபோது வராத கோபம்…

2005ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தின் பெயரால், இவர்கள் கூக்குரலிடுகிற தேசப் பாதுகாப்பு, இறையாண்மை, சுயச்சார்பு இத்தியாதி பண்புகளையெல்லாம் கேள்விக்குறியாக்கிய போது வராத கோபம்…

1984ம் ஆண்டு, பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகவும், பாதிக்கப்படவும் காரணமாக இருந்த போபால் விஷவாயுக்கசிவு தொடர்பாக இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் உரிய இழப்பீடோ, நியாயமோ வழங்காததற்காக வராத கோபம்…. (அப்போது தப்பிச் சென்ற ஆன்டர்சன் இறந்தே போய்விட்டார்)devyani

அமெரிக்காவிலேயே மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட வால்மார்ட் எனப்படும் வர்த்தகச் சூரையாடல் நிறுவனம் இந்தியாவுக்குள் தனது வலையை விரித்த போது வராத கோபம்….

மான்சான்டோ எனும் மரபணு மாற்றப் பேரழிவு நிறுவனத்தை ஊடுருவச் செய்து, நமது பாரம்பரியமான பன்னெடுங்கால விதைவளத்தையும், மண்வளத்தையும் சுரண்டத் தலைப்பட்டபோது வராத கோபம்…

மாகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் கொத்துக்கொத்தாக செத்துமடியக் காரணமான மரபணுமாற்றப் பருத்திவிதைகளை அமெரிக்க நிறுவனங்களும், முகவர்களும் விற்பனை செய்த போது வராத கோபம்…

சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற அமெரிக்காவின் ஆளுகைக்குள் இருக்கும் அதிகார மையங்கள்  அனைத்தும், இந்தியாவில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களையும், இலவச உதவிகளையும் நிறுத்தினால்தான் நிதியுதவி என்று கிடுக்கிப்பிடி போட்டபோது வராத கோபம்…..

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், ஐநா என்ற சர்வதேச அதிகார மையத்தை தன் கைக்குள் வைத்துக்கொண்டு, இரட்டை வேடம் போட்டு இன அழிப்புக்குத் துணைபோனதோடு மௌனமும் காத்ததே …. அந்தக் குரூரமான துரோகத்தைப் பார்த்து வராத கோபம்…

இப்படி….

அமெரிக்காவுக்கு எதிராகக் கோபப்பட வேண்டிய, கொந்தளிக்க வேண்டிய மோசமான தருணங்களில் எல்லாம், கைகட்டி, வாய் பொத்தி இருந்து விட்டு, இப்போது அனைத்துத் தரப்பினரும் அமெரிக்காவுக்கு எதிராக ஆவேசப் படுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. தேவயானியின் தந்தை ஒரு ஐஏஎஸ் அதிகாரி. தேவயானி மருத்துவக் கல்வியை முடித்துவிட்டு சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதி, கடந்த 1999ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரியாக தேர்வானார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளைப் போலவே, ஐஎப்எஸ் பணிகளிலும், அரசியல் லாபி செய்தால்தான், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற சொகுசு தேசங்களில் தூதரக அதிகாரிகளாக வாழ்வை அனுபவிக்க முடியும். இல்லாவிட்டால், சோமாலியா, கென்யா, உஸ்பெஸ்கிஸ்தான், என்று ஏதாவது ஒரு உருப்படாத நாட்டு தூதரகத்தில் காலம் தள்ள வேண்டியதுதான்.

தேவயானியைப் பொறுத்தவரை அவர் பாகிஸ்தான், இத்தாலி போன்ற நாடுகளில் இருந்துவிட்டு இப்போது அமெரிக்காவில் உள்ளார். அடுத்ததாக ஐநாவுக்கே அவரை அனுப்பிவைக்க இந்தியா தவமிருக்கிறது. இத்தனை உயரத்துக்கு அவர் எளிதில் செல்ல உதவியது, அதிகார வர்க்கத்துக்குள் ஊடுருவி அவர் செய்த “லாபி”தான். லாபி என்பது திரைப்படங்களில் வாய்ப்புப் பெற நடிகைகள் செய்யும் சில முயற்சிகளையும், சமரசங்களையும் போன்றதுதான். அந்தத் துறையில் அதற்கு வேறு பெயர். அதிகாரவர்க்கத்தின் மத்தியில் அதனை ராஜதந்திரம் என்று கௌரவமாக அழைக்கிறார்கள். அத்தகைய லாபிகளைத் திறம்படச் செய்ததனால் தேவயானிக்குக் கிடைத்த பெருமைகள்தான் இவ்வளவும்.

போகட்டும். லாபி, சூழ்ச்சி, ராஜதந்திரம் இப்படி நாட்டுக்கும், துறைகளுக்கும் தகுந்தபடி பல பெயர்களில் அழைக்கப்படும் “அந்த” நரித்தனத்துக்கு இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.

ஆனால்…

தேவயானிக்காக “மற்றுமொரு சுதந்திரப் போராட்டத்தை”யே தொடங்கி விட்ட இந்தியத் தலைவர்களும், அரசியல் கட்சிகளும், அவர் வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்ற சங்கீதா என்ற அந்தப் பெண்ணின் நிலை குறித்தும், அவர் தரப்பு நியாயங்கள் குறித்தும் பெயரளவுக்குக் கூட பேசவில்லை.

இந்தியாவில் உள்ளதைப் போல் இல்லாமல் அமெரிக்காவில் வீட்டுவேலை செய்பவர்களுக்கு சட்டரீதியான சில பாதுகாப்புகள் உறதிப்படுத்தப்பட்டுள்ளன. ஊதியம் வழங்குவதில் இருந்து, விடுப்பு வழங்குவது வரை அங்கு குறைந்தபட்ச நெறிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

தேவயானியைப் போன்றவர்கள் மனித அறத்தைப் புறந்தள்ளியதைப் போலவே, அந்த நாட்டுச் சட்டம் சொல்லும் நியதிகளையும் நிராகரிக்கத் தயங்குவதில்லை.

அனைத்து மோசடிகளையும் செய்து, சங்கீதாவைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த தேவயானி, அவர் வெளியேறிப் புகார் செய்ததும், இந்தியாவில் இருக்கும் சங்கீதாவின் குடும்பத்தினரைக் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் துவம்சம் செய்யத் தொடங்கிவிட்டார்.

அமெரிக்கா இதில் சில மறைமுக வேலைகளைச் செய்ததாகவே வைத்துக் கொண்டாலும், ஒரு வேலைக்காரப் பெண்ணைக் காக்கத்தானே அவற்றைச் செய்தததாகக் கொள்ள முடியும்.

தேவயானி – சங்கீதா விவகாரத்தைப் பலரும் விரிவாக எழுதிவிட்டார்கள். இதில் நாம் எழுப்பும் முக்கியமான கேள்வி, அமெரிக்கா மீது கோபப்படுவதற்கு இது ஒரு காரணமா….

ராஜதந்திர உறவு ரீதியாக இது முக்கியமான பிரச்னை என்றால், ஜார்ஜ் பெர்னாண்டஸ், அப்துல் கலாம் இப்படி எத்தனையோ பேர் அமெரிக்க அதிகாரிகளால் அவமதிக்கப்பட்டிருக்கிறார்களே…

அப்போதெல்லாம், பெயரளவுக்கான கண்டனங்கள் மட்டும்தானே தெரிவிக்கப்பட்டன.

இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளின் உரிமைகளையே பறிக்கும் எல்லைக்கு இதுவரை அந்தக் கோபம் சென்றதில்லையே…

ஆட்சிக்காலம் முடியப் போகும் தருணத்தில், அமெரிக்க அடிமை என்ற தனது அடையாளத்தை மாற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முயற்சியா…

அல்லது, அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமானவர்களுக்கு நேர்ந்துவிட்ட அவமதிப்பால் வந்த ஆத்திரமா….

எதுவாக இருந்தாலும், அமெரிக்காவுக்கு எதிராகத் தற்போது மத்திய அரசு தரப்பில் காட்டப்படும் எதிர்ப்பு என்பது, நாட்டு நலனில் அக்கறையுள்ள உண்மையான கோபம் அல்ல என்பது மட்டும் உண்மை.

அமெரிக்காவிடம் உண்மையாகவே கோபப்பட எத்தனையோ அழுத்தமான காரணங்கள் இருக்கின்றன. நிச்சயமாக அது தேவயானி விவகாரமாக இருக்க முடியாது.

நாடு முழுவதும் இப்போது காணப்படும் அமெரிக்க எதிர்ப்பு அலை, வேறுசில “அலை”களைப் போலவே வெறும் காட்சிப்பிழை மட்டுமே.

 

செம்பரிதி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*