நவ.1-ம் தேதி முதல் வெளி மாநிலத்தவருக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும்: பெ.மணியரசன் அழைப்பு..

பெ.மணியரசன்

தமிழ்நாட்டு வேலைகளை தமிழர்களுக்கே வழங்கும் வகையில் உரிய நடவடிக்கையை அரசு எடுக்கவில்லையெனில், நவ.1-ம் தேதி முதல் வெளி மாநிலத்தவருக்கான ஒத்துழையாமை இயக்கத்தை தமிழ்நாட்டு மக்கள் முன்னெடுக்க வேண்டும் என, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.

“தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 சதவீத வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் பணியாற்றி வருவோரில் 10 சதவீதத்துக்கு அதிகமாக உள்ள வெளி மாநிலத்தவரின் பணி நியமனங்களை ரத்து செய்து, அவர்களை வெளியேற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 90 சதவீதத்தை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். அனைத்து வேலைவாய்ப்புகளிலும் மண்ணின் மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான சட்டத்தை தமிழ்நாட்டிலும் இயற்ற வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியிடங்களில் வெளி மாநிலத்தவரை அனுமதிக்கும் வகையில் திருத்தப்பட்ட போட்டித் தேர்வு விதிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அனைத்திந்திய அளவில் தேர்வு நடத்தக்கூடாது” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் பொன்மலை பணிமனை முன் செப்.11 முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

கடைசி நாளான இன்று (செப்.18) நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மகளிர் ஆயம் தலைவர் ம.லட்சுமி அம்மாள் தலைமை வகித்தார். தமிழ்த் தேசியப் பேரியக்க பொதுக் குழு உறுப்பினர் ப.சிவவடிவேலு பேரணியைத் தொடக்கிவைத்தார்.

பேரியக்கத்தின் பொருளாளர் அ.ஆனந்தன், திருச்சி மாநகரச் செயலாளர் வே.க.இலக்குவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் நா.வைகறை, க.அருணபாரதி, வழக்கறிஞர் கோ.மாரிமுத்து, க.விடுதலைச்சுடர், தை.ஜெயபால், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ம.ப.சின்னதுரை உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீத வேலைகளை வட மாநிலத்தவர்களுக்கு வழங்குகின்றனர். 10 சதவீதத்துக்கும் குறைவாகவே தமிழ்நாட்டினருக்கு வழங்குகின்றனர். இது தமிழ் மண்ணில் தமிழர்களை வஞ்சிக்கும் செயல். படித்த தமிழக இளைஞர்கள் வேலை கிடைக்காமல் வீதி வீதியாக அலைந்து கொண்டிருக்கும் நிலையில், வெளி மாநிலத்தவர்கள் கரோனா காலத்தில்கூட இங்கு பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளதுபோல், தமிழ்நாட்டிலும் மத்திய, மாநில அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கே வேலை என்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால், ஆட்சியாளர்கள் செவிசாய்க்கவே இல்லை. அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில்கூட ஆட்சியாளர்களோ, மற்றவர்களோ இதைப் பற்றிப் பேசவில்லை. தமிழ்நாடு முதல்வரும் குரல் கொடுக்கவில்லை.

மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும். குறிப்பிட்ட நாட்கள் வரை காத்திருப்போம். இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில், நவ.1-ம் தேதி முதல் வெளி மாநிலத்தவருக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தைத் தமிழ்நாட்டில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

இதன்படி, வெளி மாநிலத்தவருக்குத் தமிழர்கள் வாடகைக்கு வீடு அளிக்கக் கூடாது. கடை வைக்க அனுமதி அளிக்கக்கூடாது. கடை வைத்தால் அங்கு பொருட்கள் வாங்கக் கூடாது. வெளி மாநிலத்தவரை வேலைக்குச் சேர்க்கக்கூடாது. இவ்வாறு வெளி மாநிலத்தவரை வெளியேற்றும் போராட்டத்தை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்” என்றார்.