நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு, ஓட்டுநர் உரிமத்தில் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என உச்சநீதி மன்றம் அறிவித்த நிலையில், நீட் தேர்வு விண்ணப்பத்திற்கும் ஆதார் எண் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற மே 6 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், விண்ணப்பங்கள் நேற்று (08.02.18) இணையதளத்தில் வெளியாகின.
அதில், ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள், அவர்களது விண்ணப்பப் படிவத்தில் தனது ஆதார் எண், பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினத்தை கட்டாயமாக பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் ஆதார் அட்டை இல்லாத விண்ணப்பதாரர்கள், ஆதார் சட்டம் பிரிவு 3 இன் படி, ஆதார் அட்டை சேர்க்கை மையத்திற்கு சென்று ஆதார் பெற்ற பிறகு, தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
அஸ்ஸாம், ஜம்மு காஷ்மீர், மேகாலயா மாநிலங்கள் தவிர மற்ற மாநில மாணவர்கள் ஆதார் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் என் ஆர் ஐக்கள் அவர்களது பாஸ்போர்ட் அல்லது ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஆதார் விவரங்கள், மாணவர்களின் விவரங்களோடு பொருந்தவில்லை எனில், 2018 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
எனவே, நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், அவர்களது பள்ளிச்சான்றிதழில் உள்ளது போலவே தனது ஆதார் விவரங்களை வைத்திருக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.