பணமதிப்பு நீக்கத்தை அவசரப்பட்டு ஆதரித்தமைக்கு வருந்துகிறேன்: கமல்ஹாசன்..

பணமதிப்பு நீக்கத்தை அவசரப்பட்டு ஆதரித்தமைக்கு வருந்துவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், பணமதிப்பு நீக்கம் தவறென்பதை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் பத்திரிகை ஆனந்த விகடனில் எழுதிவரும் பத்தியில் கமல்ஹாசன் இதனைத் தெரிவித்துள்ளார். அந்தப் பத்தியில், “பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அவசரப்பட்டு ஆதரித்தமைக்கு வருந்துகிறேன். பணமதிப்பு நீக்கம் தவறென்பதை பிடிவாதம் காட்டாமல் பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொள்ள வேண்டும். அவ்வாறாக அவர் ஒப்புக்கொண்டால் நான் அவருக்கு எனது வணக்கத்தை தெரிவிப்பேன்” என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
அந்தப் பத்தியில் மேலும் சில கருத்துகளையும் அவர் பதிவு செய்திருக்கிறார். “சில திட்டங்கள் நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்டாலும் நடைமுறையில் தோல்வியுறும் என்று நினைத்துக் கொண்டேன். தற்போது யோசனையே கபடமானது என்பது போன்ற உரத்த குரல்களுக்கு அரசிடமிருந்து பலவீனமான பதில்களே வரும்போது சந்தேகம் வலுக்கிறது.
தவறுகளை திருத்திக் கொள்வது குறிப்பாக அதை ஒப்புக்கொள்வது பெருந்தலைவர்களின் முத்திரை. காந்தியால் அதை செய்ய முடிந்தது. இன்றும் அது சாத்தியமே. நான் எப்போதாவது தவறு செய்தால், அதற்காக வருத்தம் தெரிவிக்க சிறிதும் தயங்கமாட்டேன். பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கமல் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுவரை தமிழகத்தில் ஆளும் அதிமுகவை விமர்சித்துவந்த கமல்ஹாசன் மத்தியில் ஆளும் பாஜகவை வெளிப்படையாக விமர்சித்ததில்லை. இந்நிலையில், தற்போது பணமதிப்பு நீக்கத்துக்கு எதிராகவும் பிரதமரைக் குறிப்பிட்டும் தனது விமர்சனத்தை கமல்ஹாசன் பதிவு செய்திருக்கிறார்.
பணமதிப்பு நீக்கம் பற்றி பிரதமர் மோடி அறிவித்தபோது, “கட்சி வரையறைகள் கடந்து இச்செயல் பாராட்டப்படவேண்டும்” என்று ட்விட்டரில் தனது கருத்தை கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

‘மெர்சல்’ : திரை விமர்சனம்..

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts