பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறச்செயலா? : ப.சிதம்பரம் கேள்வி..


பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை கறுப்புப் பண ஒழிப்பு தினமாக மத்தியில் ஆளும் பாஜக கொண்டாடும் இன்றைய தினத்தில், ‘கோடிக்கணக்கானோர் இன்னலுற்றது அறமான செயல்தானா?’ என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்கட்சிகள் ‘பணமதிப்பு நீக்க கறுப்பு தினம்’ அனுசரித்து வருவதையடுத்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் பலருக்கு வேலை பறிபோனதையும் மறுக்க முடியாது என்று ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ‘அற ரீதியிலான நடவடிக்கை, ஒழுங்குக்கான ஒரு முதல் அடிவைப்பு’ என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்ததையடுத்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தொடர் ட்வீட்களில் அவரது கூற்றின் மீது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளார்.
“பணமதிப்பிழப்பு அறரீதியான நடவடிக்கை என்கிறார் நிதியமைச்சர், கோடிக்கணக்கானோர் மீது துன்பத்தை ஏற்றுவதுதான் அறச்செயலா? குறிப்பாக 15 கோடி தினக்கூலிகள் பாதிக்கப்பட்டது அறச்செயலா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஜனவரி-ஏப்ரல் 2017-ல் 15 லட்சம் வேலைவாய்ப்புகளை அழித்ததும், சிறு மற்றும் குறுந்தொழில்கள் ஆயிரக்கணக்கில் மூடப்பட்டதும் அறமா?
கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற எளிதான வழி ஏற்படுத்திக் கொடுத்ததுதான் அறமா?
சூரத், பிவாண்டி, மொராதாபாத், ஆக்ரா, லூதியானா மற்றும் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களை சேதப்படுத்தியது அறச்செயலா? பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்பு தினமான இன்று உண்மைச் சம்பவங்களை வாசிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கானோருக்காக பிரார்த்தனை செய்க.
பணசுழற்சியை செயற்கையாக குறைத்தது பொருளாதார வளர்ச்சியின்மைக்கும், தேவை குறைவானதற்கும் ஒரு காரணமாகும்.
“வெளிப்படைத்தன்மை நலன்களுக்காக ஆர்பிஐ வாரிய திட்டம், பின்னணி குறிப்பு, முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் குறிப்பு ஆகியவற்றை அரசு/ஆர்பிஐ வெளியிடுவது அவசியம். அரசு தன்னுடைய முடிவில் நம்பிக்கை கொண்டிருக்குமேயானால், இந்த ஆவணங்களை வெளியிட ஏன் தயக்கம்?”
மோடியின் இந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தை சேதமாக்கியுள்ளது என்று பிபிசி கூறுகிறது, பிபிசி என்ன ஊழல் மற்றும் கருப்புப் பண ஆதரவாளரா? இவ்வாறு தொடர் ட்வீட்களில் ப.சிதம்பரம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.


 

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை தலைமை தேர்தல் ஆணையத்தில் தொடங்கியது..

பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து கருப்பு உடையில் கருணாநிதி …

Recent Posts