புதுடெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு காவல் (நேஷ்னல் செக்யூரிட்டி கார்டு) கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் பேசி, பிரதமர் மீது ரசாயன தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மும்பை போலீஸார் தெரிவித்ததாவது:
காசிநாத் மண்டல்(22). இவர் பாதுகாப்பு ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் டி.பி.மார்க் காவலரால் மத்திய மும்பையில் ஜூலை 27 அன்று கைது செய்யப்பட்டார். கடந்த வெள்ளியன்று, புதுடெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்புக் காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தொடர்பு கொண்டு இவர் பிரதமர் மீது ரசாயன தாக்குல் நடத்துவது குறித்து மிரட்டல் விடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்எஸ்ஜி (தேசிய பாதுகாப்புக் காவல்) அந்த எண் எங்கிருந்து பேசப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து தொலைபேசி அழைப்பைப் பற்றி மும்பை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் போலீஸார் மண்டலைத் தேடும் படலத்தில் இறங்கியபோது, அவர் ஜார்க்கண்ட்டைச் சேர்ந்தவர் என்றும் வாகேஷ்வர் பகுதியில் ஒரு குடிசையில் வசித்து வருகிறார் என்றும் கண்டறியப்பட்டது. பின்னர் மும்பை மத்திய ரயில்வே நிலையத்தில், சூரத் செல்லும் ரயிலில் செல்ல இருந்தநிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
போலீஸ் விசாரணையின்போது, மண்டல் கூறுகையில், ஜார்க்கண்டில் அவரது நண்பர் சமீபத்தில் நக்சல் தாக்குதலில் உயிர் இழந்ததாகவும், இந்த சூழ்நிலையில் தான் பிரதமரை சந்திக்க விரும்பியதாகவும் தெரிவித்தார்.
இந்திய தண்டனைச் சட்டம் 505 (1) மற்றும் (2) (எந்த அறிக்கையையும் வெளியிடுவது அல்லது பரப்புதல், பகைமையை உருவாக்கும் அல்லது ஊக்குவிக்கும் விதமாக வதந்தி பரப்புதல், வகுப்புகளுக்கிடையே பகைமையை உருவாக்கி வெறுப்பை வளர்த்தல்) மற்றும் 182 (பொது ஊழியர் சட்டபூர்வமான அதிகாரத்தை பயன்படுத்தி மற்றொரு நபரின் மீது காயத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தவறான தகவலை அளித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் காசிநாத் மண்டல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.