போர்க்கள ஒத்திகையை நடத்த உத்தரவிட்டது முதல்வரா? டிஜிபியா? தலைமைச் செயலாளரா?- ஸ்டாலின் கேள்வி


அப்பாவி மக்கள் மீது இருமுறை துப்பாக்கிச் சூடு நடத்தி, பலமுறை விருப்பம்போல் தடியடி நடத்தி, அங்கு ஒரு போர்க்கள ஒத்திகையை நடத்த உத்தரவிட்டது முதல்வரா? காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியா? அல்லது தலைமைச் செயலாளரா? என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி, பொதுமக்களைக் கொடிய நோய் உபாதைகளிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நியாயமான, நீண்டநாள் கோரிக்கைக்காக, அமைதியாக வந்த மக்கள் பேரணியை கலவரப் பேரணியாக மாற்றிய காவல்துறையினரின் அட்டகாசம், அராஜகம், இன்னும் தூத்துக்குடி மாவட்டத்தில் அடங்காமல் கோர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது.

நள்ளிரவுகளில் வீடுகளில் இருக்கும் பெண்களையும், இளைஞர்களையும் எல்லா வரம்புகளையும் மீறி, அடித்து உடைத்து கைது செய்வது, விசாரணை என்ற பெயரில் விபரீதமாகத் துன்புறுத்துவது போன்ற செயல்கள், ஏதோ சர்வாதிகார ஹிட்லரின் அட்டூழிய ஆட்சி நடைபெறுவதைப் போல திடீரென்று கொத்துக் கொத்தாக மக்களைக் கைதுசெய்து எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே தெரியாமல், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் தமிழ்நாடு காவல்துறையின் கொடுங்கோல் வேட்டைகளுக்குக் கடும் கண்டனத்தை திமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

சரியான தலைமை இல்லாமல் மாநில நிர்வாகம் முற்றிலும் நீர்த்துப் போய்விட்ட தமிழ்நாட்டின் காவல்துறை, தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டித் தனத்தைத் தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருப்பது, ஜனநாயகத்திற்குப் பேரழிவைத் தந்துவிடும். நேற்றைய தினம் தூத்துக்குடி மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தபோது, அவர்கள் அனைவரும் ஒரே குரலில் காவல்துறையின் அட்டூழியத்தை – அராஜகத்தை, சீருடையில்லாமல் சாதாரண உடையில் காவல்துறையினரை வாகனத்தின் மேல் நிறுத்தி குறி வைத்துச்சுட்டு வீழ்த்திய பயங்கரக் கொடுமைகளைக் கதறி அழுது கொட்டித்தீர்த்தது இன்னும் என் இதயத்தைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறது.

அந்தளவிற்கு மிக மோசமான துன்புறுத்தலுக்கு – மனிதநேயமே சிறிதும் இல்லாத இன்னல்களுக்கு அம்மக்கள் உட்படுத்தப்பட்டு, வாழ்வில் இதுவரை காணாத, அந்த பீதியில் இருந்து இன்னும் மீளமுடியாமல் தவித்துக் கதறிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மட்டுமின்றி, வீடுகளில் உள்ள மக்களும் வேதனைத் தீயில் மூழ்கி, எந்தநேரத்தில் போலீஸ் வந்து என்ன கெடுபிடி செய்யுமோ என்ற பயத்திலும், சோகத்திலும், துயரத்திலும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு யார் தலைமை வகிக்கிறார்கள்? யார் கட்டளை இடுகிறார்கள்? யாருடைய கட்டுப்பாட்டில் அவர்கள் எல்லாம் செயல்படுகிறார்கள்? அரசுக்காக – பொதுமக்களுக்காக அவர்கள் செயல்படுகிறார்களா அல்லது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்காக கூலிப்படையாக மாறி ஓவர்டைம் வேலை செய்கிறார்களா? என்பதெல்லாம் புரியாத புதிராக இருக்கிறது. ஒரு தனியார் ஆலைக்கு வேறு ஏதோ ஒரு நோக்கத்திற்காக, பாதுகாப்பு கொடுக்க மக்களாட்சி நெறிமுறைகளுக்கு முரணாக, மூன்று மாவட்டங்களில் இணையதளங்களை முடக்கி, காட்டுமிராண்டித்தனமாக, அப்பாவி மக்கள் மீது இருமுறை துப்பாக்கிச் சூடு நடத்தி, பலமுறை விருப்பம்போல் தடியடி நடத்தி, அங்கு ஒரு போர்க்கள ஒத்திகையை நடத்த உத்தரவிட்டது முதல்வரா? காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியா? அல்லது தலைமைச் செயலாளரா? என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் எழுகிறது.

அரசுக்கு எதிராக போராடாத – ஒரு கார்ப்பரேட் முதலாளியின் பிடிவாதத்தை எதிர்க்கும் நிராயுதபாணியான அப்பாவி மக்கள் மீது அரசு எந்திரத்தைப் பயன்படுத்தி ஏ.கே.47 துப்பாக்கிகளைக் கொண்டு கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்? தனியார் ஆலைக்காக அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரையிலும், முதல்வரும் ஏன் இப்படி ஏதுமறியாத மக்கள்மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து, அரச பயங்கரவாதத்தை நிறைவேற்றினார்கள் என்பதற்கு திமுக ஆட்சி தமிழக மக்களின் பேராதரவோடு அமைந்தவுடன் நிச்சயம் பதில் சொல்ல வேண்டியதிருக்கும்.

பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட யாரும் சட்டரீதியான நடவடிக்கையில் இருந்து நிச்சயம் தப்பிக்க முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன். ஆகவே, இலங்கையில் கொடுங்கோலன் ராஜபக்‌சே நடத்தியதை நினைவுபடுத்துவதைப் போல, வேண்டுமென்றே ஊருக்குள் புகுந்து கைது செய்யப்பட்டவர்கள், பேரணியில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் எங்கு இருக்கிறார்கள்? அவர்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறார்களா அல்லது அவர்களுடைய உயிருக்கு அச்சுறுத்தலா என்பது பற்றி அதிமுக அரசு உடனடியாக ஒரு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும். அப்பாவி மக்களை விடுதலை செய்ய வேண்டும். படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களை, தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து மாற்றி தனியார் மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சை அளிக்கவும், அந்த செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்கவும் தயக்கமின்றி முன்வேண்டும்.

அதுமட்டுமின்றி, 144 தடையுத்தரவை உடனடியாக விலக்கிக் கொண்டு, ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து கொண்டிருக்கும் போலீஸாரும், நள்ளிரவில் பெண்களைக் கைதுசெய்து துன்புறுத்தும் போலீஸாரும் அங்கிருந்து உடனே அகற்றப்பட வேண்டும். கலவரபூமியாக காட்சியளித்துக் கொண்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் நல்லிணக்கக் குழுவை அமைத்து, மக்களுடன் சுமுக பேச்சுவார்த்தை நடத்தி, சகஜ வாழ்க்கைக்கான அமைதி திரும்ப, அதிமுக அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு : திமுக உறுப்பினர்கள் அமளி..

தலைமை செயலகம் முன் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது..

Recent Posts