மசோதாவை ஒப்புதல் அளிக்க கோருவது அரசியல் ஆதாயம் தேடும் செயலா?: ஸ்டாலின் கேள்வி …

அதிமுக அரசு அனுப்பிய மசோதாவை ஒப்புதல் அளிக்க கோருவது அரசியல் ஆதாயம் தேடும் செயலா? முதல்வர் பழனிசாமி, தன்னுடைய யோக்கியதையைத் தமிழக மக்களுக்கு நிரூபிக்க வேண்டுமானால், நாளையே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு ஆளுநரின் அனுமதியைப் பெறட்டும் என ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது குறித்து ஆளுநருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு ஆளுநர் அளித்த பதிலில் மேலும் 3 அல்லது 4 வார கால அவகாசம் தேவை இதை அமைச்சர்களிடமும் தெரிவித்தேன் என எழுதியிருந்தார்.

இதுகுறித்து ஸ்டாலின் அறிக்கை விட அதற்கு முதல்வர் காட்டமாக ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுகிறார் என இன்று பதிலறிக்கை விட்டார்.
இதற்கு பதிலளித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் அரசு அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் தாருங்கள் என கேட்பது அரசியல் ஆதாயம் தேடும் செயலா? எனக் கேட்டுள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

“விதையைத் தூவிவிட்டு, வியர்வை சிந்தாமல் – தண்ணீர் பாய்ச்சாமல் – ஊட்டம் தராமல் – பாதுகாப்பு செய்யாமல், அதுவாகவே முளைத்துக் கொள்ளும் என்று, பகல் கனவு கண்டு கொள்ளும் ‘போலி விவசாயியான’ முதல்வர் பழனிசாமி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் அவரது வழக்கமான, ‘ஆத்திரத்தில் பிறந்த, அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுகளும்; அரசியல் நாகரீகம் அற்ற அவதூறுகளும்’ பொறுப்பற்ற முறையில், போகிற போக்கில் கூறப்பட்டுள்ளன. அதில் அவரது இன்னமும் பக்குவப்படாத அரசியல் பண்பாடு வெளிப்படுகிறது.

அதற்கு வார்த்தைக்கு வார்த்தை பதில் அளித்து அவருடன் லாவணிக் கச்சேரி செய்ய விரும்பவில்லை. தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சியினராலும், ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்குவதாகும். இந்த மசோதாவை நிறைவேற்றி அனுப்பி ஒரு மாத காலம் ஆனபிறகும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதற்கான ஒப்புதலை இன்னும் வழங்கவில்லை.

“நீட்” தேர்வு முடிந்து, தேர்ச்சிப்பட்டியலும் வெளியாகி, கலந்தாய்வுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில், ஆளுநர் எப்போது இந்த மசோதாவுக்கு அனுமதி வழங்குவார் என்பது யாருக்கும் தெரியாத நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து ஆளுநருக்குக் கடிதம் அனுப்பினேன். ஆளுநர் அலட்சியம் காட்டினால், அதற்கான போராட்டத்தை அதிமுக அரசு முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

எனது கடிதத்துக்குப் பதிலளித்த ஆளுநர், நான்கு வார காலம் ஆகும் என்கிறார். ஏற்கனவே நான்கு வாரம் ஆன நிலையில், இன்னும் நான்கு வாரம் என்பது அதிகம் என்பதால், ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தத் திமுக திட்டமிட்டது.

இது திமுகவின் உரிமை; ஜனநாயகக் கடமை. இதனை ‘அரசியல் ஆதாயம் தேடும் செயல்’ என்று முதல்வர் சொல்கிறார். அரசியல் ஆதாயம் தேடுவதற்கு, அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட மசோதாவை மேலும் தாமதம் செய்யாமல் நிறைவேற்று என்றா சொல்வார்கள்? இந்த குறைந்தபட்ச பொது அறிவு கூடவா முதல்வருக்கு இல்லாமல் போய்விட்டது? எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தின் மீது, பல்லாயிரம் கோடி மதிப்பிலான ஊழல் முறைகேடுகளின் பட்டியலைக் கொடுத்து, எங்களுக்கு அரசியல் ஆதாயம் தேடத் தெரியாதா?

ஒரு மாநிலத்தை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து ஒரு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தரக்கோருகிறார்கள் என்பது ஆளுநர் கவனத்துக்குப் போனால், விரைந்து முடிவெடுப்பார் என்ற நல்லெண்ண எதிர்பார்ப்பின் அடிப்படையில் தான், ஆளுநருக்குக் கடிதம் எழுதினேன், சேர்ந்து போராட முதல்வரையும் அழைத்தேன், நாளைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறேனே தவிர எந்தவித அரசியல் ஆதாயத்துக்காகவும் அல்ல.

இந்தப் பிரச்சினையில், எங்களுடைய கண்ணுக்குத் தெரிவது, அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்கால நலனே அன்றி, அதில் அரசியல் என்பது அறியாமை. கரோனாவை கட்டுப்படுத்தியதால் பழனிசாமிக்குத் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் நற்பெயர் ஏற்பட்டுள்ளதாம்; அதனைப் பார்த்து நான் காழ்ப்புணர்ச்சி அடைந்துள்ளேனாம். அவருக்கு என்ன நற்பெயர் ஏற்பட்டுள்ளது என்பதை ஏதாவது ஒரு ஊரில் தனியாக நடந்து போய் மக்கள் மத்தியில் துணிச்சலாகக் கேட்கட்டும்.

அந்தப் பெயர் நாற்றமெடுப்பதாகவே இருக்கும். நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களது கோபத்துக்கும் ஆளாகி, மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளார் பழனிசாமி. இதனை மறைத்து, நற்பெயர் என்று அவர் சொல்லிக் கொள்வது, உப்புக் கல்லை வைரம் என்று சொல்லும் பேதைமை. அறிந்தே, மனசாட்சியை மறைத்தே, தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு, பிறரையும் ஏமாற்றுவதற்குச் சமம்.

தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்று அவர் சொன்னதால் மக்கள் ஆதரவு அவருக்குப் பெருகி வருவதாக அவரே சொல்லிக் கொள்கிறார். அல்லது அப்படி அவர் நம்ப வைக்கப்பட்டுள்ளார். ஓர் அரசாங்கம், மக்களிடமிருந்து ஈட்டும் வருவாயைப் பயன்படுத்தி, மக்களுக்கு அடிப்படையாகச் செய்ய வேண்டிய கடமையை, ஏதோ கருணையாக நினைத்துக் கொள்வது, மனிதாபிமானமற்ற செயல் என்பது அவருக்கு இன்னுமா புரியவில்லை?

வெள்ளத்தில் மிதக்கும் மக்களுக்கு உணவுப்பொட்டலம் போடுவதை, ‘விலையில்லா உணவுப்பொட்டலம்’ என்று சொல்வது எத்தகைய கொடூரமோ, அத்தகைய கொடூரம் தான் கரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்பதும். துளியும் இரக்கமற்ற தன்மையின் வெளிப்பாடு இது என்பதை நினைத்து, தமிழ்நாட்டு மக்கள், தமது தவப்பயனை (?) எண்ணித் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்!

தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படுவது,பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகுதான் என்பதை ஏனோ மறந்துவிட்டு, நீட் தேர்வு குறித்து என்னென்னவோ சம்பந்தமில்லாதவற்றைக் கூறியிருக்கிறார். பழனிசாமி, அருகதையைப் பற்றி, தனது அறிக்கையில் அளந்து விட்டிருக்கிறார். இவர் தன்னுடைய அருகதையை – யோக்கியதையைத் தமிழக மக்களுக்கு நிரூபிக்க வேண்டுமானால், நாளையே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு ஆளுநரின் அனுமதியைப் பெறட்டும்”.

இவ்வாறு ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

எஸ்பிஐ முதல்நிலைத் தேர்வில் இடஒதுக்கீடு விவகாரம் : தொடரும் மத்திய பாஜக அரசின் சமூக அநீதி: ஸ்டாலின் கண்டனம்..

அளவில்லா மருத்துவக் குணம் கொண்ட அற்புத மருந்து பெருங்காயம் …

Recent Posts