மதிமுகவுக்கு ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதிகள்: தொகுதிப் பங்கீடுகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம்

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது:

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க 20 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் சூழல் உருவாகி உள்ளது. விசிகவுக்கு 2 , மதிமுகவுக்கு ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை, இடதுசாரிகளுக்கு தலா 2 தொகுதிகள், ஐ.ஜே.கேவுக்கு 1 , கொ.ம.தே.கவுக்கு ஒரு தொகுதி என ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதிப் பங்கீடு நிறைவு செய்யப்பட்டுள்ளது.  கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி ஒதுக்கீடு என்பது குறித்து இரண்டொரு நாட்களில் அறிவிக்கப்படும். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு விசிகவிற்கு யோசனை கூறியுள்ளோம். மனிதநேய மக்கள் கட்சிக்கு இந்த முறை கூட்டணியில் இடம் ஒதுக்க வாய்ப்பில்லாததால், ஆதரவை மட்டும் கோரியுள்ளோம்.