மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியாவுக்கு ரூ. 1. கோடிக்கு தங்கம் : சுப்பிரமணியன் சுவாமி ..


மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தீபாவளிப் பரிசாக நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் ரூ. 1 கோடிக்கு தங்கம் பெற்றுள்ளார் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அதிகாரியின் பெயர் குறிப்பிடாமல் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

டெல்லியில் மோதி பாக் பகுதியில், எடிஎம்சி, குடியிருப்பில் வசிக்கும் மத்திய அரசின் உயரிய பதவில் இருக்கும் ஒரு அதிகாரி தீபாவளிப் பரிசாக நிரவ் மோடி, முகுல் சோக்யிடம் கடந்த 2016ம் ஆண்டு ரூ. ஒரு கோடிக்கு தங்கம் பரிசாகப் பெற்றுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அல்லது அமலாக்கப்பிரிவு மூலம் விசாரணை நடத்த பிரதமர் உத்தரவிட வேண்டும். மேலும், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தவகையில், நிரவ் மோடி மீது புதிய வழக்கும் பதிவு செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,600 கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி இருப்பவர்கள் வைர வியாபாரி நிரவ் மோடி, கீதாஞ்சலி ஜெம்ஸ் உரிமையாளர் மெகுல் சோக்சி என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதும் 2 நாட்களுக்கு முன் “ தி வயர் ” இணையதளத்தில் இது தொடர்பான கட்டுரை வெளியாகி இருந்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது

மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா, கடந்த 2016ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் போது, 20கிராம் எடையுள்ள, 2 தங்க பிஸ்கட்களை முக்கிய நபர்களிடம் இருந்து பெற்றுள்ளார். அந்த நபர்கள் இப்போது இந்தியாவில் இல்லை என்றுதெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், அந்த கட்டுரையில் ஹஸ்முக் ஆதியா அளித்துள்ள பேட்டியில், நான் எந்தவிதமான பரிசுப் பொருட்களும் யாரிடமும் இருந்து பெறவில்லை. அது ஒழுக்கவிதிகளுக்கு மாறானது. என்னுடைய கவனத்துக்கு வராமல் என் வீட்டில் அந்த பரிசுப்பொருட்களை யாரோ அளித்துவிட்டு சென்றனர். ஆனால், யார் அனுப்பியது என்பதைக் கூட என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

இதையடுத்து அந்த பரிசுப்பொருட்களை நான் அரசின் கரூவூலத்தில் விதிமுறைகளின்படி சமர்பித்துவிட்டேன். அந்த பரிசில் ஒரு விலைமதிப்புள்ள ஐபோன்7, 20 கிராம் எடை கொண்ட இரு தங்க பிஸ்கட்கள் இருந்தன” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரைக்கு பின், பிரதமர் மோடிக்கு புகார்கடிதத்தை சுப்பிரமணியன் சுவாமி எழுதியுள்ளார்