மம்தா மூக்கை அறுப்பவர்களுக்கு 1 கோடி பரிசு: ராஜபுத்ர தலைவர் அறிவிப்பு..


பத்மாவதி திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்த, மேற்கு வங்க மாநில முதல்வர், மம்தா பானர்ஜியின் மூக்கு, காதை அறுப்பவர்களுக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக, ராஜபுத்ர சமுதாய தலைவர் ஒருவர் அறிவித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், நடிகை தீபிகா படுகோனே நடித்த, பத்மாவதி திரைப்படத்தை வெளியிடுவதற்கு ராஜபுத்ர சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜபுத்ர சமூகத்தினரை அவமதிக்கும் வகையிலான காட்சிகள், இந்த படத்தில் இடம் பெற்றுள்ளதாக, அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். படத்துக்கு தடைவிதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என ராஜஸ்தான், குஜராத், பீகார் மாநில அரசு அறிவித்தது. இதற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை தீபிகாவுக்கு, மிரட்டல் வந்த நிலையில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜி, அவருக்கு ஆதரவு தெரிவித்தார். மேற்கு வங்கத்தில், பத்மாவதி திரைப்படத்தை திரையிட அனுமதி அளிப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜபுத்ர சமுதாயத்தினர், உ.பி., மாநிலம், ஷாமலி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘மம்தா பானர்ஜியின் மூக்கு, காதை அறுத்து வருபவர்களுக்கு, 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அந்த சமுதாயத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் அறிவித்தார். நடிகை தீபிகாவின் தலைக்கு ரூ. 10 கோடி பரிசு அறிவித்த பாஜ தலைவர் திடீர் திருப்பமாக தனது கட்சி பதவியை நேற்று ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.