முதலைகள் அப்பாவிகள் என பிரதமரின் அழுகைக்கு ராகுல்காந்தி கிண்டல் அடிக்கும் வகையில் பதிலளித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மேலும் இரண்டாவது அலையில் இதுவரை 420 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இப்படி இந்தியா முழுவதும் முன்கள பணியாளர்கள் தொற்று பாதித்து அதிகமாக உயிரிழந்து வருகிறார்கள்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்களுக்கு முன்பு வாரணாசியில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுடன் காணொளியில் பேசினார். அப்போது கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்துப் பேசும்போது, துக்கம் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.
இதையடுத்து கொரோனா பரவலை தடுக்காமல், தற்போது முதலைக் கண்ணீர் விடுகிறீர்களா என சமூக ஊடகங்களில் பலரும் பிரதமர் நரேந்திர மோடியின் அழுகையைக் கிண்டல் செய்திருந்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களை உறுப்பினருமான ராகுல் காந்தி, முதலைகள் அப்பாவிகள் என பிரதமரின் அழுகையைக் கிண்டல் செய்யும் வகையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தியின் ட்விட்டரில், “தடுப்பூசி இல்லை, குறைந்த அளவு ஜி.டி.பி, கோவி்ட்டால் அதிகரிக்கும் மரணங்கள், மத்திய அரசின் பதில் என்ன என்றால் பிரதமரின் அழுகை. முதலைகள் அப்பாவிகள்.” என பதிவிட்டுள்ளார்.
மேலும், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு வெளியிட்ட உலக பொருளாதார சூழல் குறித்த அட்டவணையையும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.