மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை.

சமூக ஆர்வலரும், மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தையும், முன்னாள் தலைமை நீதிபதிகளையும் தரக்குறைவாக விமர்சித்து ட்வீட் செய்தமைக்காக, அவருக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்து, உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.

பிரசாந்த் பூஷண் மீது மட்டுமல்லாமல், அவரின் ட்வீட்டை அனுமதித்த ட்விட்டர் இந்தியா மீதும் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.காவே, கிருஷ்ணா முராரே ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வருகிறது.

கடந்த மாதம் 27-ம் தேதி மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். அதில், “வரலாற்று அறிஞர்கள் எதிர்காலத்தில் திரும்பிப் பார்க்கும்போது, கடந்த 6 ஆண்டுகளாக எந்தவிதமான அதிகாரபூர்வ அவசரநிலை பிறப்பிக்கப்படாமல் ஜனநாயகம் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை அறிவார்கள்.

அதிலும் ஜனநாயகத்தை அழிப்பதில் உச்ச நீதிமன்றத்தின் பங்கு என்ன என்பதையும், அதிலும் குறிப்பாக 4 முன்னாள் தலைமை நீதிபதிகளின் பங்கும் தெரியவரும்” எனக் குறிப்பிட்டார்.

இந்த ட்விட்டர் கருத்துதான் பிரசாந்த் பூஷண் மீது உச்ச நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முக்கியக் காரணமாகும்.

இதுமட்டுமல்லாமல், கடந்த மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஹார்லி டேவிட்ஸன் பைக்கில் அமர்ந்தவாறு ஒரு புகைப்படம் எடுத்திருந்தார்.
அதையும் பிரசாந்த் பூஷண் விமர்சித்து, முகக்கவசம், ஹெல்மெட் இல்லாமல் அமர்ந்த தலைமை நீதிபதி என்று விமர்சித்தார்.

ஆனால், உண்மையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அந்த பைக்கை இயக்கவில்லை, அந்த பைக்கில் அமர்ந்து மட்டுமே பார்த்தார், அமரும்வரை முகக்கவசம் அணிந்திருந்தார் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் வழக்கை உச்ச நீதிமன்ற கையாண்ட விதத்தையும், விசாரித்ததையும் பிரசாந்த் பூஷண் விமர்சித்தார்.

பிமா கோரிகான் வழக்கில் கைதாகியுள்ள சமூக ஆர்வலர்கள் வரவரா ராவ், சுதா பரத்வாஜ் ஆகியோருக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் இருப்பதையும், அதை நீதிமன்றம் கண்டிக்காமல் இருப்பதையும் பிராசந்த் பூஷண் விமர்சித்தார்.

இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் பிராசந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் அவமதிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது.

பிரசாந்த் பூஷண் மீது அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றம் தொடர்வது இது 2-வது முறையாகும். கடந்த 2009-ம் ஆண்டு இதேபோன்று அவர் மீது அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது.

நீதிபதிகள் குறித்து பிரசாந்த் பூஷண் சர்ச்கைக்குரிய கருத்துகளை வாரப் பத்திரிகை ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு 2012 மே மாதத்துக்குப் பின் இன்னும் விசாரிக்கப்படாமல் இருக்கிறது. இந்த வழக்கும் வரும் 24-ம் தேதி விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது.