பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி பரபரப்பு அடங்குவதற்குள், ஹைதராபாத்தில் மற்றொரு மிகப்பெரிய வங்கி மோசடி நடந்துள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த டோடெம் கட்டுமான நிறுவனம் ரூ. ஆயிரத்து 394 கோடியை மோசடி செய்ததாக யூனியன் பேங்க் ஆப் இந்தியா சிபிஐயிடம் புகார் அளித்துள்ளது. இதையடுத்து, சிபிஐ இந்த கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
டோடெம் கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர்கள் டோட்டெம்புடி சலாலித், அவரின் மனைவி டோட்டெம்புடி கவிதா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களுக்கு லுக்அவுட் நோட்டீஸை சிபிஐ அனுப்பி உள்ளது. ஆனால் இவர்கள் இருவரும் எங்கு இருக்கிறார்கள் என்கிற விவரம் தெரியவில்லை.
யூனியன் பேங்க் ஆப் இந்தியா தலைமையிலான 8 வங்கிகளில் ஏறக்குறைய ரூ.1,392 கோடி கடன் பெற்று டோடெம் கட்டுமான இயக்குநர்கள் தலைமறைவாகி உள்ளனர்.
இதில், யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி ரூ. 313.84 கோடியும், எஸ்பிஐ வங்கி ரூ. 357.64 கோடி, பேங்க் ஆப் பரோடா ரூ.208.67 கோடியும் கடன் கொடுத்துள்ளன. ஐடிபிஐ வங்கி ரூ.174.47 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.126.30 கோடி, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கி ரூ.79 கோடி, ஜே எம் பைனான்சியல் அசெட் ரூ.69 கோடி, சிண்டிகேட் வங்கியில் ரூ.64 கோடி என மொத்தம் ரூ.1,394 கோடி டோடெம் நிறுவனத்துக்கு வங்கிகள் கடன் கொடுத்துள்ளன.
யூனியன் பேங்க் ஆப் இந்தியா தலைமையிலான 8 வங்கிகள் சிபிஐயிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து நேற்று ஹைதராபாத்தில் இரு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இது குறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ”யூனியன் பேங்க் ஆப் இந்தியா தலைமையிலான 8 வங்கிகளில் ரூ.1,394 கோடி டோடெம் நிறுவனம் கடன் பெற்றுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பின் இந்த நிறுவனம் வட்டியும், முதலும் செலுத்தாததால் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் எங்கிருக்கிறார்கள் என இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
இதில் டோடெம் கட்டுமான நிறுவனம் சாலை திட்டப்பணிகள், வீடு,மிகப்பெரிய கட்டிடங்கள் கட்டுதல் உள்ளிட்டவற்றை செய்து வருகிறது. மேலும் பல்வேறு நிறுவனங்களுக்கு சப் கான்ட்ராக்ட் பணிகளையும் எடுத்து செய்து வந்தது குறிப்பிடத்தக்கது” எனத் தெரிவித்தார்.