“காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டுமே ஆபத்தானவைதான். அதற்காக முலாயம் சிங்கை மூன்றாவது தலைவராகவோ, பிரதமராகவோ ஏற்க முடியாது.”
பிரபல தொலைக்காட்சி ஒன்றின் கருத்துக் கேட்புப் பகுதியில், போகிற போக்கில் கடந்து சென்ற முகம் தெரியாத எளிய மனிதரின் குரல் இது.
பாரதிய ஜனதாவின் மோடி நர்த்தனம் ஒருபக்கமும், காங்கிரசின் ராகுல் ராகம் மறுபக்கமுமாக இந்திய அரசியல் மேடை அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அவற்றால் எந்தச் சலனமும் அடையாத அந்த எளிய கிராமத்து மனிதரின் துல்லியமான அரசியல் தீர்க்கம் நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது.
பாரதிய ஜனதாவா, காங்கிரசா, மோடியா, ராகுல் காந்தியா என, மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் ஒட்டு மொத்த அரசியலையும் இரண்டே கூறுகளுக்குள் அடக்கிவிட வேண்டும் என்பதுதான், பேரரசியல் சக்திகளின் தற்போதைய ஒரே உன்மத்த இலக்கு.
அதன் அடையாளம்தான் ஆம் ஆத்மி போன்ற சிறு சிறு எதிர்ப்புக் குறியீடுகளைக் கூட வேருடன் பிடுங்கியெறிவதில், இரு பெரும் கட்சிகளுமே காட்டும் வேகமும் ஆத்திரமும். மூன்றாமவராக ஏற்கத்தக்க தகுதி முலாயமுக்கு இருக்கிறதா இல்லையா என்பது வேறு சங்கதி. ஆனால் மோடியின் முரட்டு முழக்கத்துக்கும், ராகுலின் அசட்டுச் சொல்லாடல்களுக்கும் தரும் முக்கியத்துவத்தை இந்த ஊடகங்கள் மூன்றாவதாக யாருக்குமே தருவதில்லையே அது ஏன்?
பாரதிய ஜனதா, மோடியை “படேல்” என்கிறது. காங்கிரஸ் ராகுலை “நேரு”வாகச் சித்தரிக்கப்பார்க்கிறது. இருவருமே, பேராதிக்க மனமும், ஒடுக்குமுறைச் சிந்தனையும் கொண்டவர்கள்தான்.
சமஸ்தானங்களை மட்டும் அவர் ஒன்றிணைக் கவில்லை. அஸ்ஸாம் போன்ற சிறு சிறு தேசிய இனங்களின் குறைந்த பட்ச சுதந்திரத்தைக் கூட மறுதலித்து, வலுக்கட்டாயமாக இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாக அரசியல் வன்முறை மூலம் அவர்களைக் கீழ்மைப்படுத்தியவர்.
அஸ்ஸாமில் தற்போதும் அரங்கேறிக் கொண்டிருக்கும் கூடுதல் அதிகாரம் கொண்ட ராணுவத்தின் அடக்குமுறையும், அதற்கு எதிராக 12 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வரும் இரோம் ஷர்மிளாவும், படேலின் சர்வாதிகார வாள் கிழித்த காயங்களிலிருந்து பெருக்கெடுக்கும் ரத்த சாட்சியான தொடர்ச்சிகள்தான்.
நேருமட்டும் குறைந்தவரா என்ன? காஷ்மீர் எனும் குங்குமப் பூமி ரத்தக்காடாக மாறியதற்கு, அண்டையிலும், எல்லையிலும் இருக்கும் அனைத்துப் பகுதிகளும் இந்தியாவுக்கே சொந்தம் என்ற நேருவின் ஆதிக்க மனம்தானே காரணம். இலங்கையையும், நேபாளத்தையும் கூட “பெயரளவுக்கு சுதந்திர நாடுகள் என்றாலும், அவையும் இந்தியாவின் பகுதிகளே” என்று எண்ணியவர்தான் நேரு.
தமிழர்களை அவர் மனிதர்களாகக் கூட மதித்ததில்லை. அப்புறம் எப்படி அவர்களது உணர்வுகளை மதிப்பார். அண்ணா குறித்து அவர் வெளியிட்ட விமர்சனங்களைக் கவனித்தாலே, இந்த இனத்தின் மீது அவர் வைத்திருந்த “மரியாதை” நமக்குப் புலப்படும்.
மார்வாரி, குஜராத்தி முதலாளிகளின் வர்த்தக வலைப்பின்னலை விஸ்தரிக்க ஹிந்தியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்ற அவரது ஆதிக்க வெறியை எதிர்த்து நின்ற ஒரே தலைவர் பெரியார் என்பதாலும், ஒரே இயக்கம் திராவிட இயக்கம் என்பதாலும்தான் திராவிட இயக்கத்தையும் அதன் தலைவர்களையும் கடைசிவரை அவர் தீண்டத்தகாதவர்களாகவே பார்த்து வந்துள்ளார்.
படேலுக்கும், நேருவுக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான். வல்லபாய் படேல் அழுத்தமான ஆர்.எஸ்.எஸ் பின்னணியைக் கொண்டவர். நேரு வெளியில் தன்னை நாத்திராகவும், ஜனநாயகவாதியாகவும் அடையாளம் காட்டிக்கொண்ட பேராதிக்கவாதி. மோடிக்கு படேலைப் பிடிப்பதில் எந்த வியப்பும் இல்லை.
நேரடியாக அவர் படேலின் தொடர்ச்சியாக அறிவித்துக் கொள்வதும் கூடப் பொருத்தமானதுதான்.
2001ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட மதக்கலவரத்துக்கு அதிகார பீடத்தில் அமர்ந்தபடியே தலைமையேற்ற போதே, படேலின் வாரிசாகத் தன்னை அவர் வரித்துக் கொண்டுவிட்டார்.
குஜராத் கலவரத்தின் ரத்தத்திட்டுகளை, அரசியலில் தனது அடுத்தகட்ட உயரத்தை எட்டுவதற்கான பீடமாக மாற்றிக் கொண்டதுதான் மோடியின் மிகப்பெரிய சாகசம்.
சாகசங்கள் நமது சமூகத்தில் எப்போதுமே அதிக கவனத்தைப் பெறுவது இயல்புதானே?
அந்த வகையில் தலைக்குப் பின்னால் காவி ஒளிவட்டம் சுழல, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவராக வலம் வரத் தொடங்கியிருக்கிறார் மோடி.
ராகுலின் தலைக்குப் பின்னாலும் நேருகுடும்ப ஒளிவட்டத்தைச் சுழல வைக்க காங்கிரஸ் கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
முலாயம் சிங் மூன்றாவது வாய்ப்பாக தன்னை முன்னிறுத்த முயற்சிக்கிறார்.
சிறுபான்மையின மக்களின் பாதுகாவலர் என்ற பெயரளவுக்கான முழக்கம் மட்டுமே, பாரதிய ஜனதாவிடமிருந்தும், காங்கிரசிடமிருந்தும் முலாயம் தன்னை வேறுபடுத்திக்காட்டிக் கொள்ளப் போதுமானதா?
படேலுக்கும், நேருவுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்ற நிலை இருக்கும் போது, முலாயமின் சமாஜ்வாதிக் கட்சி மட்டும் எந்த வகையில் வேறுபட்டுவிடும்.
அந்த எளியமனிதரின் குரலில் இருந்து ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. மக்கள் இப்போது விரும்புவது வெறும் அணி மாற்றமல்ல. அரசியல் மாற்றம்.
மூன்றாமுலக சந்தைச் சூழலில், விரைந்து கரைந்து கொண்டிருக்கும் இந்தியாவின் குறைந்த பட்சத் தனித்துவத்தையும், தற்சார்பையும் காத்து நிற்பதற்கு, வெறும் அணி மாற்றம் போதாது. அழுத்தமான அரசியல் மாற்றத்தை முன்வைக்கும் சக்திகள் தேவை என்பதை மக்கள் உணரத் தொடங்கி இருக்கின்றனர்.
அது யார் என்பதுதான் தற்போதைய முக்கியமான கேள்வி.
மேனா.உலகநாதன்