வாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: பிரதமர் மோடி குற்றசாட்டு…


காங்கிரஸ் ஆட்சியின் போது, அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி அளிக்கப்படும் என அளித்த வாக்குறுதியை சோனியா நிறைவேற்றவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் அளிக்கும் வகையில் மத்திய அரசு அறிமுகபடுத்திய சவுபாக்யா திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள் மத்தியில் பிரதமர் பேசியதாவது:

இந்தியாவை முன்னர் ஆட்சி செய்த அரசுகள் வாக்குறுதிகள் அளித்தன. ஆனால், அவற்றை நிறைவேற்ற தவறிவிட்டன. முந்தைய ஆட்சியின் போது, 2009க்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு கொடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா உறுதியளித்தார். ஆனால், 2009, 2010,2011 என ஆண்டுகள் கடந்த போதிலும் வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவில்லை.

முந்தைய ஆட்சியில் யாரும் முக்கிய தலைவர்களாக இல்லாததால், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால், தற்போது அவர்கள், பா.ஜ., அரசு கொண்டு வரும் திட்டங்களை எதிர்க்கின்றனர். குறை சொல்கின்றனர்.

அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி அளிக்கப்படும் என செங்கோட்டையில் பேசிய போது நான் கூறினேன். அதனை நோக்கி நாங்கள் செயல்படுகிறோம். மின்சாரம் விநியோகம் செய்வதில் மட்டும் செய்யவில்லை. நாடு முழுதும் மின்விநியோகத்தில் சீர்திருத்தம் செய்துள்ளோம்.

2018 ஏப்.,28 க்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கிடைத்துவிடும். அன்றைய நாள் வரலாற்றில் முக்கியமான நாளாக இருக்கும். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும், மின்சாரம் இல்லாமல் வீடுகள் இருப்பது வருத்தத்திற்குரியது என்றார்.