தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன.
12-ம் வகுப்பு தேர்வுகளை தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதுகின்றனர்.
இதனை முன்னிட்டு 2 ஆயிரத்து 941 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வறை கண்காணிப்பாளர் பணிக்கு 44 ஆயிரத்து 400 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முறைகேடுகளைத் தடுக்க முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்களைக் கொண்ட 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு வளாகத்திற்குள் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபடும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்டூ தேர்வுகளில் இதுவரை பாடம் ஒன்றுக்கு 200 மதிப்பெண்கள் என 1200 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில்
இந்த ஆண்டு பாடம் ஒன்றுக்கு 100 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றன. அதேபோன்று மொழிப்பாடங்களுக்கு இரண்டு தாள் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு
இந்த ஆண்டு ஒரே தாளாக தேர்வுகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் துரைப்பாக்கத்தில் தேர்வு மையம் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 600 மதிப்பெண்களாகக் குறைக்கப்பட்டதால் பாடச்சுமை கூடியிருப்பதாக கூறப்படுவதை மறுத்தார்.
போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடங்கள் விளக்கமாக கொடுக்கப்பட்டு பக்கங்கள் மட்டுமே அதிகப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.