13-வது ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா: ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடக்கம்: மும்பை-சிஎஸ்கே அணிகள் மோதல்…

13-வது ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் இரவு 7.30 மணிக்கு நடப்பு சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, 3 முறை சாம்பியனான மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 13-வது சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகின்றன, வழக்கமாக கோலாகலமாக தொடக்க விழாவுடன் தொடங்கும் இந்த கிரிக்கெட் திருவிழா இம்முறை எந்தவித ஆரவாரமும் இல்லாமல் காலி மைதானத்தில் தொடங்குகிறது, இதற்கு கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலே காரணம். இந்த வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக
கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் தொடங்க வேண்டிய ஐபிஎல் தொடர் பல மாதங்களுக்குப் பிறகு வெளிநாட்டு மைதானங்களில் தற்போது நடைபெற உள்ளது.
இன்று தொடங்கும் லீக் ஆட்டமானது வரும் நவம்பர் 3ம் தேதி முடிவடைகிறது. இந்த காலக்கட்டத்தில் 56 லீக் ஆட்டங்கள் நடை பெற உள்ளன. தொடரில் கலந்து கொண்டுள்ள 8 அணிகளும் தலா இரு முறை நேருக்கு நேர் மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

பிளே ஆஃப் நடைபெறும் தேதி, மைதானங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. சுமார் 53 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவின் இறுதி ஆட்டம் நவம்பர் 10ம் தேதி நடைபெறுகிறது.

தொடக்க நாளான இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, 3 முறை
சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் அபுதாபியில் நடைபெறுகிறது. மும்பை அணியின் பேட்டிங் ரோஹித் சர்மா, குயிண்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, கிருணல் பாண்டியா, கெய்ரன் பொலார்ட் என வலுவாக உள்ளது. பந்து வீச்சில் இறுதிக்கட்ட ஓவர்களில் எதிரணிக்கு சவால் தரும் ஜஸ்பிரீத் பும்ராவுடன் டிரண்ட் போல்ட், நேதன் கவுல்டர் நைல் ஆகியோரும் நெருக்கடி தரக்கூடும்.

சென்னை அணி பேட்டிங்கில் ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, பிராவோ, தோனி உள்ளிட்டோ
ருடன் வலுவாக உள்ளது. வேகப்பந்து வீச்சில் லுங்கி நிகிடி, ஷர்துல் தாக்குர், ஜோஸ் ஹசல்வுட் பலம் சேர்க்கக்கூடும்.

இன்றைய போட்டி

நேரம்: இரவு 7.30
இடம்: அபுதாபி
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்